நிபந்தனை அடிப்படையில் இலங்கைக்குள் அனுமதிக்கப்படும் சீன கப்பல்!

நிபந்தனை அடிப்படையில் சீனக் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் யுவான் வாங் 5 ஆய்வு கப்பல் நாளைய தினம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த கப்பல் எதிர்வரும் 22ம் திகதி வரையில் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆவணங்களை வழங்க நடவடிக்கை
குறித்த சீன ஆய்வு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதுடன், அது தொடர்பிலான ஆவணங்களை ஹாபர் மாஸ்டரிடம் வழங்குவதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

சீன ஆய்வுக் கப்பல் கடந்த 10ம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவிருந்தது. இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக இந்த கப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுமென எதிர்ப்பு
இந்த கப்பலை ஆய்வு கப்பலாக அடையாளப்படுத்தினாலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், செய்மதி கட்டமைப்பு என்பனவற்றை கண்காணிக்கக்கூடிய தொழிநுட்பங்கள் காணப்படுவதாகவும் இதனால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்த கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் எவ்வித விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளையும் மேற்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது