அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக பெட்ரோலைக் கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் பொலிஸ் குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் – மதுரங்குளி பகுதியிலிருந்து முல்லைத்தீவு – கோகிலாறு பகுதிக்கு சந்தேகநபர் பெட்ரோலைக் கெப்ரக வண்டியில் கொண்டு செல்ல முயற்சித்துள்ளார்.
இதன்போது புத்தளம் பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி பகுதியில் வைத்து இந்த வண்டியை நேற்று (16) மடக்கிப்பிடித்துள்ளனர்.
பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரின் நடவடிக்கை
அனுமதி பத்திரமின்றி கெப்ரக வண்டியில் பெட்ரோலைக் கொண்டு செல்வதாக பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் குற்றவியல் விசாரணை பிரிவினருக்குத் தகவலை வழங்கியதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 2 பரல்களில் 400 லீட்டர் பெட்ரோல் கைப்பற்றப்பட்டதாகவும் கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
கைப்பற்றப்பட்ட பெட்ரோலை இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக கொண்டு வந்திருக்கலாமென பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.