கொரொனோ மரணங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 15 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், குளிர் காலநிலை நெருங்கும்போது ஆபத்து காரணிகள் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலக அளவில் 15,000 பேர்கள் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus, கொரோனா வைரஸ் பரவலால் அயர்ந்துவிட்டோம். பெருந்தொற்று காலம் நீண்டுகொண்டே செல்வதால் சோர்வடைந்துள்ளோம்.

ஆனால் வைரஸ் சோர்வடையவில்லை. அதனால், நாம் தடுப்பு நடவடிக்கைகளைக் கைவிடக் கூடாது என குறிப்பிட்டுள்ளார். மேலும், குளிர் காலம் நெருங்கி வருவதால், மக்கள் அதிக நேரம் குடியிருப்பினுள் செலவிட நேரலாம்.

இதனால் தொற்று மேலும் உக்கிரமாக பரவ வாய்ப்புள்ளது. மட்டுமின்றி எதிர்வரும் மாதங்களில் மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.