மட்டக்களப்பில் நிறை குறைவான பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மட்டக்களப்பில் 10வீதமாக காணப்பட்ட நிறைகுறைந்த பிள்ளைகளின் எண்ணிக்கை தற்போது 20வீதமாக அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கு.சுகுணன் தெரிவித்துள்ளார்.

இதனை கருத்திற்கொண்டு சத்துமா வழங்கும் வேலைத்திட்டம் நேற்று(18) வவுணதீவு பகுதியில் அரசாங்க அதிபரின் ஒத்துழைப்புடனும், வைத்தியர் கு.சுகுணனின் தலைமையிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு வைத்தியர் கு.சுகுணன் மேலும் தெரிவிக்கையில்,

”மட்டக்களப்பு இலங்கையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களை அதிகளவில் கொண்டிருப்பதனால் போசாக்கு குறைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக காணப்படுகிறது.

பொருளாதார சீர்குலைவு
கடந்த ஒரு வருடகாலமாக இலங்கையில் ஏற்பட்ட திடீர் பொருளாதார சீர்குலைவால் கர்ப்பிணித்தாய்மார்களுக்கும், நிறை குறைந்த சிறுவர்களுக்கும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த திரிப்போசா உணவை கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த எட்டு மாதங்களாக நாங்கள் மாதாந்தம் எடுத்துக் கொண்டு இருக்கின்ற தரவுகளின் அடிப்படையில் பிள்ளைகளின் வளர்ச்சி வீதத்தில் பாரிய தொய்வு நிலை காணப்பட்டது.

சிறுவர்களுக்கு மூளைவளர்ச்சி என்பது 5 வயதிற்குட்பட்ட காலப்பகுதியிலே மிகச்சிறப்பாக நடைபெறுகின்றது. இதன்போது போஷாக்கு சரியான முறையில் கிடைக்கப் பெறாத நிலையில் அவர்கள் வளர்ந்த வரலாறு வரும்பொழுது புத்திக்கூர்மையை ஒரு பாரிய இடைஞ்சல் ஒன்று ஏற்பட நிறைய காரணங்கள் காணப்படும்.

நன்கொடையாட்கள்
இந்த அடிப்படையில் ஒரு சந்ததியே அல்லது ஒரு பரம்பரையே இந்த காலப்பகுதியில் வளர்கின்ற பின்னடைவில் புத்திகூர்மை குறைந்தவர்களாக இந்த இலங்கை நாட்டில் ஏற்பட முடியும் என்கின்ற ஒரு கணிப்பின் அடிப்படையில் இந்த திட்டத்தை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.

இதன் முதற்கட்டமாக நாங்கள் சத்துமா செய்கின்ற இடங்களிலிருந்து சத்துமாக்களை நன்கொடையாக பெற்று, முக்கியமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் இருந்து பெற்று, இவர்களுக்கு நாங்கள் வழங்கி வருகின்றோம்.

இன்றைய தினம் இந்த சத்துமாக்களை நாங்கள் வெளி இடத்திலிருந்து பெற்றுக் கொடுத்திருந்தாலும் தமது மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலையை அமைப்பை ஏற்படுத்தி தமது சொந்த தயாரிப்பாக தேனகபோஷாவினை விரைவில் திரிபோசாவிற்கு பதிலீடான ஒரு சத்துமாவாக வழங்கவுள்ளோம்’’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட சத்துமா நிகழ்ச்சி திட்ட பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் தர்சினி, வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் வா.ரமேஸ்குமார், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக நிர்வாக உத்தியோகத்தர் ரகு உட்பட பலர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.