தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி பேரூதவியாக இருந்தது. சிறுவர் முதல் முதியவர்கள் வரை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
அரசின் தடுப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து மாதம் ஒருமுறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பரவலை தடுக்க இதுவரையில் தடுப்பூசி போடாமல் இருந்து வருபவர்களையும் 2-வது மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்களையும் போடச்சொல்லி சுகாதாரத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 38-வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.
நிலையான மையங்களில் மட்டுமின்றி வீதி வீதியாக இடம் பெயர்ந்து சென்றும் தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. சென்னையில் 2 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இதுவரையில் முதல் தவணை தடுப்பூசி 99 சதவீதம் பேருக்கு போடப்பட்டு உள்ளது. 2-வது தவணை தடுப்பூசி 89 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது. மாநகராட்சி மற்றும் சுகாதார பணியாளர்கள் 5 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து வயது பிரிவினருக்கும் உள்ள தடுப்பூசிகள் முகாம்களில் செலுத்தப்பட்டன. காலையில் இருந்து மதியம் வரை ஒரு இடத்திலேயேயும், மதியத்திற்கு பிறகு மற்றொரு இடத்திற்கும் இடம் பெயர்ந்து சென்று தடுப்பூசி செலுத்துகின்றனர். வீதி வீதியாக நகர்ந்து சென்றும் இதுவரையில் போடாதவர்களின் பெயர் விவரங்களை கொண்டு வீடு வீடாக சென்று அழைத்தும் தடுப்பூசி செலுத்துகின்றனர். ஆனாலும் பூஸ்டர் தடுப்பூசி போடாத பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டவில்லை.
கொரோனா தொற்று வைரஸ் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. முற்றிலும் ஒழிக்கப்படவில்லை. ஆனால் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் காட்டுவதாக சுகாதார பணியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். வீடு வீடாக சென்று அழைத்தாலும் தடுப்பூசி போட முன் வராததால் சோர்வடைந்தனர்.