சுடு நீரில் துணிகளை துவைக்கலாமா?

பொதுவாக அழுக்கு துணிகளை நீரில் மூழ்க வைத்து அதில் சோப்பு தூள் கலந்து தான் அலசி துவைத்து காயபோடுவோம். இந்த செயல் முறையை வாஷிங் மெஷின் வந்த பிறகு எளிமையாக்கி விட்டது.

ஆனாலும் இன்று வரை பலரும் துணிகளை கைகளால் சோப்பு போட்டு உலர வைப்பதற்குத்தான் விரும்புகிறார்கள். துணியில் அதிகப்படியான கறைகள் படித்திருந்தால், சிலர் சுடு நீர் கொண்டு சோப்பு போட்டு அலசுவதுண்டு.

ஆனால் அப்படி அடிக்கடி சுடு நீர் கொண்டு துணிகளை அலசுவது துணியின் தரத்தை பாழாக்கிவிடும். அப்படி சுடுநீர் பயன்படுத்தி துவைக்கும்போது கறை நீங்கி பளிச்சென்று காட்சி அளிக்கும்.

அதே வேளையில் ஆடை சுருங்கிவிடக்கூடும். சுடுநீர் பயன்படுத்துவதால் இந்த பிரச்சினை ஏற்படும். மேலும் சுடு நீர் ஆடையின் நிறத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

சுடுநீரில் இருக்கும் வெப்பம் காரணமாக சாயம் மங்கி ஆடை நிறம் மாற்ற மடையக்கூடும். சுடு நீரில் அலசும்போது ஆடை சுருங்கும் பிரச்சினை காரணமாக அதில் உள்ள நூல் இழைகள் வலுவிழந்துபோய்விடும்.

எப்படி உபயோகிக்க வேண்டும்?
ஒருவேளை சுடு நீர் பயன்படுத்துவதாக இருந்தால் ஆடையின் ஒரு பகுதியை அதில் 5 நிமிடங்கள் முக்கி பரிசோதிக்கலாம்.

அப்போது ஆடையில் சுருக்கமோ, நிறம் மாறுதலோ தென்பட்டால் சுடுநீர் பயன்படுத்துவதை அறவே தவிர்த்துவிட வேண்டும்.

சுடு நீரில் துவைக்கும் தன்மை கொண்ட துணியாக இருந்தாலும் 10 நிமிடங்களுக்கு மேல் சுடு நீரில் ஊறவைக்கக்கூடாது.

ஏனெனில் எந்த துணியாக இருந்தாலும் சுடுநீரில் அதிக நேரம் ஊறவைத்தால் சுருங்கிவிட தொடங்கிவிடும்.

சுடு நீருக்கு பதில் வெதுவெதுப்பான நீரை உபயோகிக்கலாம். அது துணியின் ஆயுளை பாதுகாக்கும்.

ஆடைகளில் படியும் கறைகளை போக்குவதற்கு சுடு நீருக்கு மாற்றாக வினிகர் போன்ற பொருட்களை பயன்படுத்தலாம்.

உடல்நல பாதிப்புக்குள்ளானவர்களின் ஆடைகளை துவைப்பதற்கு சுடு நீர் பயனுள்ளதாக இருக்கும். பெட்ஷீட், தலையணை உறை போன்றவற்றை சுடு நீர் பயன்படுத்தி சுத்தம் செய்வதும் நல்லது.