சர்ச்சைக்கு உள்ளான பிரித்தானிய இன்ஸ்டாகிராமர் கெய்லி பிரேசரை உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய சுற்றுலாப் பயணியை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான ஆவணங்களில் கடந்த வாரம் ஜனாதிபதியும் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 2ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற, குடிவரவு அதிகாரிகள் குழுவொன்று, பிரேசரின் பயண ஆவணங்களை விசாரணைக்காக திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறும், ஏழு நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறும் அவருக்கு அறிவித்துள்ளது.
கெய்லி பிரேசரின் காணொளி
எனினும் குடிவரவு அதிகாரிகள் கெய்லி பிரேசரின் இல்லத்தில் எப்படி விசாரிக்கிறார்கள் என்பதை காட்டும் வகையில் அவரால் எடுக்கப்பட்ட நேரடி காணொளியொன்று வெளியாகியிருந்தது.
இதனையடுத்து காலிமுகத்திடலில் நடந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்தியதற்காக ஒரு சுற்றுலாப் பயணியை அரச அதிகாரிகள் கைது செய்ய முயற்சிக்கிறார்கள் என்ற சர்ச்சையை உருவாக்கியது.
பின்னர் விசாரணையை எதிர்கொள்வதற்காக ஆகஸ்ட் 11ஆம் திகதி பிரேசர் குடிவரவுத் தலைமை அலுவலகத்திற்கு வந்தபோது அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன், ஆகஸ்ட் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்பாக சட்டப்பூர்வமாக இலங்கையை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும், அவர் மேலும் நாட்டில் இருக்க விரும்புவதாகக் கூறி குடிவரவுத் திணைக்களத்தின் உத்தரவை செல்லுபடியாகாத படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்திருந்த நிலையில் குறித்த பிரஜை மாயமானதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
விசா நிபந்தனைகளை மீறியதாலேயே இலங்கையை விட்டு வெளியேறுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், காலிமுகத்திடல் போராட்டத்தில் அவர் ஈடுபட்டதாக விசாரணை நடத்தி வருவது உண்மைக்குப் புறம்பானது என்றும் குடிவரவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், காணாமல்போன சுற்றுலாப் பயணியை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு உதவுமாறு குடிவரவுத் திணைக்களம் பொதுமக்களையும், பொலிஸாரையும் கோரியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக குடிவரவு குடியகழ்வு பிரதி கட்டுப்பாட்டாளர் எம்.ஜி.வி.காரியவசம் மற்றும் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.