தாய்ப்பால் வங்கிகளில் தாய்ப்பாலைத் தானமாகப் பெற்று சேமிக்க முடியும். அது தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு உணவாக அமையும். பிறந்து சில நாட்களில் குழந்தை இறந்தவர்கள், அதிகளவு தாய்ப்பால் சுரப்பவர்கள் மட்டுமல்லாது, அனைத்து தாய்மார்களும் தாய்ப்பால் தானம் செய்யமுடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
பச்சிளங்குழந்தைக்கு ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலைத் தவிர வேறெதுவும் தர வேண்டாம் என்பது மருத்துவர்களின் ஆலோசனை. மாட்டுப்பாலை விட, தாய்ப்பால் சத்தானது, குழந்தையின் ஆரோக்கியத்துக்கு உகந்தது. தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தையின் மூளை வளார்ச்சி நன்றாக அமையும். ஆனால், வேலைக்குச் செல்லும் பெண்கள், தாய்ப்பால் சுரக்காதவர்கள், ஊட்டச்சத்து கிடைக்காதவர்கள் ஆகியோருக்கு இது சாத்தியமாவதில்லை.
வேலைக்குச் செல்லும் பெண்கள், தாய்ப்பாலை பாத்திரத்தில் சுரந்து சேமிக்க முடியும். அறை வெப்ப நிலையில், அதிகபட்சம் ஏழு மணி நேரம் வரை இந்தப் பாலைச் சேமித்து வைக்கலாம். குழந்தைக்குப் பசிக்கும்போது யாரேனும் ஒருவர் அதை ஸ்பூனால் எடுத்து ஊட்டி விடலாம். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளின் ஆரோக்கியத்துக்குத் தாய்ப்பால் வங்கிகள் உதவியாக அமையும். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரு தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கிகளில் தாய்மார்களுக்கு நோய் எதுவும் இருக்கிறதா என்று முதலில் பரிசோதிப்பார்கள். ஆரோக்கியம் உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்களது தாய்ப்பால் எடுத்துக் கொள்ளப்படும். சுமார் 20 டிகிரியில் குளிரூட்டப்பட்டு சேமித்து, தாய்ப்பால் வேண்டும் குழந்தைகளுக்குத் தரப்படுகிறது. இத்தகைய வசதிகளை பயன்படுத்த, சமூகத்தில் நிலவும் தயக்கத்தை உடைத்து, அனைத்துக் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கும்படி செய்வது ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும்.