இலங்கை பயணம் தொடர்பில் பிரான்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இலங்கைக்கான பயண ஆலோசனையை எளிதாக்கியுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான பயண ஆலோசனையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
’அத்தியாவசிய பயணத்துக்கு மட்டும் பரிந்துரை’ என்ற நிலையிலிருந்து, ’கவனமாக பயணிக்கவும்’ என்ற நிலைக்கு பயண ஆலோசனையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு பயணிக்கும்போது பிரான்ஸ் குடிமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும், அரசியல் விடயங்கள் தொடர்பில் கூடுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், பயணத்துக்கு உள்ளூர் பயண ஏஜன்சிகளை பயன்படுத்துமாறும் பிரான்ஸ் நாட்டவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை தற்போது பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் மோசமான நிலைமையை எதிர்கொண்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக எரிபொருள் பிரச்சினை உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் தங்களுக்கு எரிபொருள் வாங்குவது கடினமாக உள்ளது. இதனால், பொதுப்போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மின்வெட்டும் காணப்படுகிறது என்றாலும், நிலைமை இப்போது சற்று முன்னேறியுள்ளது என்றும் பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.