இலங்கையில் கைதான இந்திய கடற்தொழிலாளர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும் மு க ஸ்டாலின்

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்தொழிலாளர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கமைய, ஆகஸ்ட் 22ஆம் திகதி 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களது இயந்திர மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம்
இந்த கடற்தொழிலாளர்கள் தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு இது போன்ற ஐந்தாவது நிகழ்வு இதுவாகும்.

மேலும் இந்த சம்பவங்கள் தமிழக கடற்தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்கிறது.

பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகள்
இலங்கையில் தற்போது 94 தமிழக மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த படகுகளின் உரிமையாளர்களை இலங்கை நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி படகு உரிமை கோர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும் இலங்கையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இது சாத்தியமற்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.