சட்டவிரோதமாக படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 8 பேர் மரைன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் மணல் திட்டில் உணவின்றி தவித்து வருவதாக கடற்றொழிலாளர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இன்று (27) காலை மரைன் பொலிஸார் விரைந்து சென்று மணல் திட்டில் தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழர்களை மீட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று (26) இரவு ஒரு பைபர் படகில் புறப்பட்டு இன்று (27) அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி ஒன்றாம் மணல் திட்டில் இறங்கியதாக தெரியவந்துள்ளது.
அகதிகளாக சென்ற இலங்கை தமிழர்களிடம் மண்டபம் மரைன் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதுடன், விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் முகாமில் இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மரைன் பொலிஸார் நடத்திய விசாரணையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜெயந்தி மற்றும் அவரது மூன்று குழந்தைகள், தலைமன்னாரை நேர்ந்த சசிகுமார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் மன்னாரை சேர்ந்த 65 வயது மூதாட்டி இந்துமதி என மொத்தமாக 8 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர் என தெரியவருகின்றது.
பட்டினி சாவில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள இந்தியா வந்தோம்
”இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை அதிகரித்துள்ளது. விலைவாசி ஒரு பக்கம் உயர்வு, மறுபக்கம் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது, அரசாங்க மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளது.
எனவே பட்டினி சாவில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள இலங்கை பணம் 4 லட்சம் ரூபாய் கொடுத்து பைபர் படகில் தமிழகத்திற்கு அகதிகளாக வந்து தமிழக முகாம்களில் தங்கியுள்ள தங்களது உறவினர்களுடன் சேர்ந்து வாழலாம்” என தனுஷ்கோடி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் செல்லும் இலங்கை மக்கள்
“தங்களை அழைத்து வந்த படகு தனுஸ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும், அதிகாலை முதல் உணவின்றி கடும் சூறைக்காற்றுக்கு மத்தியில் உயிரை பாதுகாத்து கொண்டு தாங்கள் அணிந்திருந்த ஆடைகளை காட்டி அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த கடற்றொழிலாளர்களிடம் காப்பாற்றுமாறு உதவி கோரிய நிலையில் மரைன் பொலிஸார் பத்திரமாக உரிய நேரத்தில் மீட்டனர்.
கால தாமதமாகி இருந்தால் நிச்சயம் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்“ என பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அகதியாக வந்த இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 157 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.