முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்து வரும் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 400 மில்லியன் ரூபாவை அமைச்சரவை பத்திரம் மூலம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் பத்திரத்திற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை
கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மகிந்த ராஜபக்ச வசித்து வரும இல்லத்தை மாத்திரமின்றி, அருகில் உள்ள காணியை கையகப்படுத்தி புதிய வீடமைப்பு தொகுதி ஒன்றை நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இல்லம் புனரமைக்கப்படும் வரை மகிந்த ராஜபக்ச உட்பட குடும்பத்தினர் கொழும்பு புல்லரஸ் வீதியில் உள்ள வேறு ஒரு உத்தியோகபூர்வ இல்லத்தில் வசிப்பார்கள் என கூறப்படுகிறது.
நிதி நெருக்கடி காரணமாக யோசனையை நிறைவேற்றாத கோட்டாபய
எது எப்படி இருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவையில் மகிந்த ராஜபக்சவின் இல்லத்தை புனரமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும் நிதி நெருக்கடி காரணமாக அதனை முன்னாள் ஜனாதிபதி நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.