இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பொன்னியின் செல்வன் – 1’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜெ.ஆர்.30 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜெயம் ரவியின் 31- வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கும் இப்படத்திற்கு ‘சைரன்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஆக்ஷன், க்ரைம், த்ரில்லர் ஜானரில் உருவாகும் ‘சைரன்’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும், படக்குழு சைரன் படத்தின் மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜெயம்ரவி கைதி கதாபாத்திரத்திலும் கீர்த்தி சுரேஷ் காவல் அதிகாரியாகவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.