மாம்பழம் சாப்பிடும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை சுவைக்க விரும்பாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. இதில் எண்ணற்ற சத்துக்களுடன் கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் இருப்பதால், நீண்டநேரத்திற்கு பசி உணர்வு இருக்காது.

எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும் தங்கள் டயட்டில் எவ்வித தயக்கமுமின்றி சேர்த்துக்கொள்ளலாம். மாம்பழத்தில் அளவற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

வைட்டமின் சியைத் தவிர, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பிற சத்துகளும் நிறைந்துள்ளன.

மாம்பழத்தை எவ்வாறு சாப்பிட வேண்டும்?
மாம்பழத்தை சிலர் தோலுடன் சாப்பிடுவார்கள். சிலர் தோலை சாப்பிட மாட்டார்கள். ஆனால் மாம்பழத்தை சாப்பிடுவதற்கென்று சில ஆரோக்கிய முறைகள் இருக்கின்றன.

அவற்றில் மிக முக்கியமானது சாப்பிடும் முன் சிறிது நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அப்படி சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் உண்டாகும் என்று தெரிந்து கொள்ளலாம்.

இரத்த அழுத்தம்
மாம்பழத்தில் உள்ள வைட்டமின்களின் உள்ளடக்கம் மிகவும் அதிகம். இது நமக்கு அனைத்து வழிகளிலும் நல்ல உடல் நலத்தை கொடுத்து உதவும்.

வளமான அளவு பொட்டாசியம் (146 மில்லிகிராமில் 4%) மற்றும் மெக்னீசியம் (9 மில்லிகிராமில் 2%) உள்ள மாம்பழம் அதிக இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இயற்கை மருந்தாக அமைகிறது.

கொலஸ்ட்ரால்
மாம்பழத்தில் அதிக அளவிலான பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்திருக்கின்றன. சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து பின் சாப்பிடுவதன் மூலம், உடலில் கொழுப்புகளைப் படியச் செய்யும் பைட்டோ கெமிக்கல்களின் அடர்த்தியைக் குறைக்கலாம். இயற்கையாகவே மாம்பழம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவி செய்யும்.

எடை அதிகரிக்க
உடல் எடையை அதிகரிக்க மாம்பழம் சாப்பிட்டால் சுலபமாக எடையை அதிகரிக்கலாம். 150 கிராம் மாம்பழத்தில் 86 கலோரிகள் அடங்கியுள்ளன. இதை உடல் சுலபமாக ஈர்த்துக் கொள்ளும். மேலும் மாம்பழத்தில் உள்ள மாச்சத்து அதனை சர்க்கரையாக மாற்றுவதால், எடையை அதிகரிக்க அது உதவும்.

செரிமானம்
செரிமானமின்மை மற்றும் அமிலத்தன்மையினால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது மாம்பழம். மாம்பழத்தில் உள்ள செரிமான நொதிகள் இயல்பான முறையில் செரிமானம் நடந்திட உதவும்.

இரத்த சோகை
மாம்பழத்தில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. மாம்பழங்களை ஒழுங்காகவும் தேவையான அளவும் உட்கொண்டால் குருதியின் அளவை அதிகரித்து இரத்த சோகையை சரிப்படுத்தும்.

கர்ப்பிணிகள்
கர்ப்பமான பெண்களுக்கு இரும்புச் சத்து அதிகளவில் தேவைப்படுவதால், அவர்கள் மாம்பழம் உண்ணுவது மிகவும் அவசியம். பொதுவாக கர்ப்பக் காலங்களில் இரும்புச்சத்து உள்ள மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

அதற்கு பதில் வளமான இரும்புச்சத்துள்ள சாறு நிறைந்த மாம்பழங்களை உண்ணுதல் சாலச் சிறந்தது.

முகப்பரு
முகப்பருவை சரிப்படுத்த மாம்பழம் மிகவும் உதவுகிறது. ஏனெனில் சருமங்களில் அடைப்பட்ட துவாரங்களை விடுவிக்க அது உதவும். இந்த துவாரங்கள் திறந்தவுடன் முகப்பருக்கள் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். அடைப்பட்ட துவாரங்களை நீக்கி விடுவதே முகப்பருவை நிறுத்த உதவும் சிறந்த வழி.

இந்த பயனை அனுபவிக்க எப்போதும் மாம்பழம் சாப்பிட வேண்டியதில்லை. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் மாம்பழ கூழை எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விட வேண்டும்.

இளமை
மாம்பழங்களில் உள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, கொலாஜென் புரதத்தை உடலில் சுரக்க உதவி புரிகிறது. இரத்தக் குழாய்களையும் உடலில் உள்ள இணைப்புத் திசுவையும் காக்க கொலாஜென் உதவுவதால், வயதான தோற்றத்தை வெளிப்படுத்துவதை மாம்பழம் தள்ளி வைக்கும்.

புற்றுநோய்
மாம்பழத்தில் உள்ள பெக்டின், புரோஸ்டேட் புற்று நோய் வருவதையும் தடுக்கும்.

மூளை வளர்ச்சி
மூளையின் செயல்களை பாதுகாத்து மேம்படுத்த மிகவும் முக்கியமான வைட்டமின் பி6, மாம்பழங்களில் ஏராளமாக இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி
ஏற்கனவே சொன்னது போல் கேரட் மற்றும் மாம்பழங்களில் அதிக அளவு பீட்டா-கரோட்டீன் மற்றும் காரோட்டினாய்டு உள்ளது. உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலிமைப்படுத்த மாம்பழத்தில் உள்ள மேற்கூறிய தனிமங்கள் உதவி புரிகின்றன.

சர்க்கரை நோய்
இன்னும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், சில ஆய்வின் படி, மாம்பழம், சர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்து. மாம்பழத்தில் உள்ள இனிப்புச்சத்தால், சர்க்கரை நோயாளிகள் அதை கண்டிப்பாக உண்ணக் கூடாது என்ற நம்பிக்கை நீண்ட நாட்களாகவே உள்ளது.

ஆனால் இப்போது அது பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. மாம்பழத்தை தவிர அதன் இலைகளும் கூட சர்க்கரை நோய்க்கு நல்ல மறந்தாகும்.

கண்களின் ஆரோக்கியம்
ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 25 விழுக்காடு வைட்டமின் ஏ சத்தை, ஒரு கப் நறுக்கிய மாம்பழங்கள் தருகின்றன. இது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் இது மாலைக் கண் மற்றும் வறட்சியான கண்களை தடுக்கும்.

மாம்பழம் சாப்பிடும் போது செய்யக்கூடாதவை
இந்நிலையில், மாம்பழம் சாப்பிடும் போது செய்யக் கூடாதவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம். மாம்பழத்தை ருசித்த பிறகுஇந்த 5 பொருட்களை சாப்பிடக் கூடாது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

தண்ணீர்
கோடையில் உடலில் நீர்ச்சத்து குறைய சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். ஆனால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு இதை செய்யாதீர்கள். இதனால் வயிற்று வலி ஏற்படும். குறைந்தது 30 நிமிடங்களுக்குப் பிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பாகற்காய்
பாகற்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது, ஆனால் மாம்பழத்தை உட்கொண்ட உடனேயே அதை சாப்பிடக்கூடாது. இதனால் வாந்தி, தலைச்சுற்றல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

மசாலா
கோடையில் மாம்பழத்தைச் சுவைக்க வேண்டும், ஆனால் இந்த பழத்தை சாப்பிட்ட பிறகு, அதிக மிளகாய் மற்றும் மசாலாப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும். இதனால் தோல் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

தயிர்
கோடை காலங்களில் வயிற்றைக் குளிர்ச்சியாக வைத்திருக்க தயிர் சாப்பிடுவது நல்லது என சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள், ஆனால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு தயிரைத் தொடாதீர்கள். ஏனெனில் இது சளி மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

குளிர் பானங்கள்
குளிர் பானங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு, அத்தகைய பானத்தை குடிக்கக்கூடாது, ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை கணிசமாக அதிகரிக்கிறது. இதைத் அடிக்கடி செய்வதால், சர்க்கரை நோய் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.