சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், இதே தேதியில் மற்றொரு ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என ரெட்மி தெரிவித்து இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் ரெட்மி A1 எனும் பெயரில், மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இது Mi தீபாவளி விற்பனையின் அங்கமாக வெளியாக இருக்கிறது. புதிய ரெட்மி A1 ஸ்மார்ட்போன் லெதர் போன்ற டெக்ஸ்ச்சர் கொண்ட பேக் பேனல் கொண்டிருக்கும் என ரெட்மி வெளியிட்டு இருக்கும் டீசரில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிரீன், புளூ மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் அறிமுகமாகும் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது. இதன் டிஸ்ப்ளேவில் நாட்ச் இடம்பெற்று இருக்கிறது.
இத்துடன் மீடியாடெக் பிராசஸர், கிளீன் ஆண்ட்ராய்டு அனுபவம் வழங்கும் என ரெட்மி தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்போன் MIUI-க்கு மாற்றாக ஸ்டாக் ஆண்ட்ராய்டு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள், ஏஐ கேமரா அம்சங்களுடன் வெளியாகிறது.
புது ரெட்மி A1 எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும் இதன் விலை 2019 வாக்கில் ரூ. 4 ஆயிரத்து 499 விலையில் அறிமுகமான ரெட்மி கோ ஸ்மார்ட்போனை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படாது என்றே தெரிகிறது. ரெட்மி A1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.