பிரித்தானியாவில் வீடு ஒன்றை வாங்கிய தம்பதியர் அந்த வீட்டை புதுப்பிக்கும்போது கிடைத்த புதையலால் கோடீஸ்வரர்களாகியிருக்கிறார்கள்.
கிழக்கு யார்க்ஷையரிலுள்ள Ellerby என்ற இடத்தில் வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார்கள் ஒரு தம்பதியர். அந்த வீட்டை அவர்கள் புதுப்பிக்கும்போது, சமையலறையில் மண்ணுக்கடியிலிருந்து ஏதோ மின்னுவதைக் கண்டுள்ளார்கள் அவர்கள்.
சரி அது ஏதாவது மின்சார வயராக இருக்கலாம் என முதலில் எண்ணிய அவர்கள் அதை கவனமாக பார்க்க, அது ஒரு நாணயம் என்பது தெரியவந்துள்ளது.
உடனே அந்த பகுதியில் சற்று ஆழமாகத் தோண்ட, ஒரு பாத்திரம் கிடைத்துள்ளது. அந்த பாத்திரத்திற்குள் நூற்றுக்கணக்கான தங்க நாணயங்கள் இருப்பதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளார்கள் அவர்கள்.
அந்த பாத்திரத்திற்குள் 260 தங்க நாணயங்கள் இருந்துள்ளன.
அவற்றின் மதிப்பு 200,000 முதல் 250,000 பவுண்டுகள்வரை இருக்கலாம் என முதலில் கணக்கிடப்பட்டது.
ஆனால், இந்த புதையல் விடயம் குறித்து அறிந்த அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா, சீனா மற்றும் ஜப்பான் நாட்டவர்கள் அந்த நாணயங்களை ஏலத்தில் எடுக்க, அதன் மதிப்பு எங்கேயோ போய்விட்டது.
தற்போது, 754,000 பவுண்டுகளுக்கு அந்த நாணயங்கள் ஏலம் போயுள்ளன.
அந்த நாணயங்களை ஏலம் விட்ட ஏல நிறுவனமே, பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதையல்களில் இது ஒன்று என்று கூறியுள்ளது.
இதற்கிடையில், புதையல் கிடைக்கப்பெற்ற அந்த அதிர்ஷ்டக்கார தம்பதிகள், தங்கள் பெயரை இரகசியமாக வைத்துக்கொள்வதென முடிவு செய்துள்ளார்கள்.