முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இடமாற்றம்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளராக கடமையாற்றிய சரத் சந்திரநாயக்க எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளராக கடமையாற்றிய திரு.வி.கலிஸ்ரன் மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போராட்டங்கள்
கடந்த சில நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சமாசம் ஒருங்கிணைந்து, முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளர் தடைசெய்யப்பட்ட கடற்தொழிலுக்கு துணைபோவதாகவும் ஆகவே அவரை இடமாற்றம் செய்யுமாறு கோரி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு கடற்தொழில் அலுவலகத்திற்கு முன்பாக நடத்தி வந்த குறித்த போராட்டத்திற்கு அமைவாக இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (2.10.2022) விஜயம் மேற்கொண்டு அதிகாரிகள், அலுவலக உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.