கனடாவில் சர்வதேச அளவில் நடைபெறும் பாரிய மோசடி!

கனடாவில் வேலை என்ற கனவுடன் கனடாவுக்கு புலம்பெயர்ந்தோர் பலர், வீட்டு வாடகை, விலைவாசி போன்ற செலவுகளை சமாளிக்க முடியாமல், அமைதியாக சொந்த நாடு திரும்புவதைக் குறித்த ஒரு கவலையை ஏற்படுத்தும் செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.

தற்போது, அதேபோல, சர்வதேச மாணவர்களைக் குறிவைத்து செய்யப்படும் மோசடி குறித்த ஒரு செய்தியும் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

தில்பிரீத் கௌர் (19), கனடாவிலுள்ள கல்லூரி ஒன்றில் படிப்பதற்காக கனவுகளுடன் இந்தியாவிலிருந்து புறப்பட்டார்.

நான் கனடாவுக்குப் போகிறேன், படிக்கப் போகிறேன், படித்துவிட்டு கனடாவிலேயே வேலை பார்ப்பேன், வார இறுதிகளை சினிமாவில் பார்ப்பதுபோல ஜாலியாக செலவிடுவேன் என்று எண்ணிக்கொண்டு கனடா வந்தடைந்தார். ஆனால், தான் கனடாவுக்கு வந்தபோது எல்லாமே முற்றிலும் வித்தியாசமாக இருந்தது என்கிறார்.

தில்பிரீத் கனடாவுக்கு வருவதற்காக அவரது தந்தை தனது இரண்டு ட்ரக்குகளை விற்கவேண்டிவந்ததுடன், அவர்களுடைய நிலத்தையும் அடகுவைக்கவேண்டியதாயிற்று.

கனடாவுக்கு வந்து ரொரன்றோவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் மேலும் சில மாணவிகளுடன் தங்கி, கல்லூரி முதலாண்டுக் கட்டணமாக 16,000 டொலர்கள் செலுத்தினார்.

இப்போது, மகளுடைய அடுத்த ஆண்டு படிப்பு செலவுக்கு என்ன செய்வது, படித்து முடித்தபின் வேலை கிடைக்குமா என்ற கேள்விகளுடன், கவலையில் ஆழ்ந்துள்ளார்கள் தில்பிரீத்தின் பெற்றோர்.

விடயம் என்னவென்றால், பல ஏஜண்டுகள், சொல்லப்போனால் இடைத்தரகர்கள், அதாவது, சர்வதேச மாணவ மாணவியர் கல்லூரிக் கட்டணமாக செலுத்தும் தொகையிலிருந்து கிடைக்கும் கமிஷனை மட்டுமே நம்பி வாழ்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு ஏஜண்டை ஒரு மாணவரும் அவரது தந்தையும் கமெரா ஒன்றை மறைத்துவைத்துக்கொண்டு சந்தித்தபோது, அந்த மாணவரின் தந்தை அந்த தரகரிடம் சில கேள்விகளை எழுப்பினார்.

அந்த ஏஜண்ட், அந்த மாணவர் முதல் ஆண்டுக் கல்விக்கட்டணமாக 17,000 டொலர்கள் செலுத்தவேண்டியிருக்கும் என்று கூறினார்.

அந்த தந்தை, என் மகனுக்கு இரண்டாம் ஆண்டுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதற்காக, வேலை ஏதாவது கிடைக்குமா என்று கேட்க, அந்த ஏஜண்ட், ஆம், மாணவர்களுக்கு வேலை கிடைப்பது மிக எளிது என்றார்.

ஆனால், உண்மையில், சர்வதேச மாணவர் ஒருவர் வாரம் ஒன்றிற்கு 50 மணி நேரமாவது வேலை செய்தால்தான், அவரது கல்வி, உணவு, தங்குமிடம் முதலான செலவுகளுக்கான பணம் சம்பாதிக்கமுடியும்.

அடுத்ததாக, ஒரு குறிப்பிட்ட கல்லூரியின் சேரலாம் என பரிந்துரைக்கிறார் அந்த ஏஜண்ட். அந்த தந்தையோ, படித்துமுடித்தால் என் பையனுக்கு வேலை கிடைக்குமா என்று கேட்கிறார்.

அதற்கு அந்த ஏஜண்ட், மாணவர்களுக்கு எளிதாக வேலை கிடைக்கும் என்கிறார். உண்மையில், அந்தக் குறிப்பிட்ட கல்லூரி அந்த ஏஜண்டுக்கு பெரும் தொகை ஒன்றை கமிஷனாக கொடுக்கக்கூடும் என்பதால் அவர் அந்தக் கல்லூரியைப் பரிந்துரைக்கிறார்.

பின்னர் அந்த தந்தை, தன் மகனுக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைக்குமா என்று கேட்கிறார். ஆம், அதுவும் மிக எளிது என்கிறார் மற்றொரு ஏஜண்ட். ஆனால், உண்மையில் 250,000 மாணவர்கள் நிரந்தரக் குடியிருப்புக்கு விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்கிறார்கள்.

விடயம் என்னவென்றால், கனடாவிலுள்ள சில கல்லூரிகள், அளவுக்கதிகமாக மாணவ மாணவியரை கல்லூரிகளில் சேர்ப்பதன்மூலம் நல்ல வருவாய் பார்க்கின்றன. அந்தக் கல்லூரிகளுக்கு மாணவ மாணவியரை அனுப்பும் ஏஜண்டுகளும் நல்ல வருவாய் பார்க்கிறார்கள்.

இப்படி ஒரு மோசடி நடப்பதைக் குறித்து கனேடிய புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraserஇடம் கேள்வி எழுப்பியபோது, சர்வதேச மாணவர்களை கனடாவில் கல்வி கற்பிக்கக் கொண்டுவரப்பட்ட திட்டம், மாணவ மாணவியருக்கு கல்வியைக் கொடுப்பதுடன், கனடாவின் பொருளாதாரத்துக்கும் உதவும் நோக்கில் துவக்கப்பட்டதாகும்.

மாணவர்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காக அல்ல என்று கூறியுள்ளார்.

அவர் இந்த மோசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனாலும், கனடாவில் கல்வி, வேலை, வாழ்க்கை என கனவு காணும் சர்வதேச மாணவ மாணவிகள், இந்த மோசடிகள் குறித்து அறிந்திருப்பதும், கவனத்துடன் செயல்படுவதும் நல்லது.