உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் தங்க சந்தையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் இந்த காலப்பகுதியில் தங்கம் விலை உயரும் காலப்பகுதி என்றாலும் தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
உலக தங்கச் சந்தையில் தொடர்புப்பட்டுள்ள நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் இவ்வாறு தங்கத்தின் விலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
உலக பொருளாதார நெருக்கடி
தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சி கண்டால் அது உலகப் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என அதிகார சபையின் விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெளிவுபடுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் காரணமாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1625 டொலராக பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை
கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலையங்களில் மார்ச் மாதத்தின் பின்னர் மிகக்குறைந்த தங்க விலை பதிவாகியுள்ளது. அதற்கமைய, 22 கரட் தங்கத்தின் பெறுமதி 160000 ரூபாயாகவும், 24 கரட் தங்கத்தின் விலை பெறுமதி 174000 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் முதலீடாக தங்கத்தை கொள்வனவு செய்தவர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஆனால் இது பாவனையாளர்களுக்கு சாதகமான நிலைமை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.