வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்து இருக்கிறது. இந்த புயலுக்கு சிட்ரங் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வங்காளதேசம் நோக்கி நகர்ந்து வருகிறது.
இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், சிட்ரங் சூறாவளி புயல் இன்று காலை நிலவரப்படி சாகர் தீவு பகுதியில் இருந்து தெற்கே 430 கி.மீ. தொலைவிலும், பரிசால் பகுதியில் இருந்து 580 கி.மீ. தெற்கு-தென்மேற்கிலும் மையம் கொண்டுள்ளது.
அடுத்த 12 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும். தொடர்ந்து வடக்கு- வடகிழக்கு நோக்கி நகர்ந்து வங்காளதேச கடலோரம் டின்கோனா தீவு மற்றும் சாண்ட்விப் பகுதிகளுக்கு இடையே நாளை அதிகாலை புயல் கரையை கடக்கும், என்று தெரிவித்து உள்ளது. புயல் காரணமாக மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக திரிபுராவில் அதிக மழை பெய்து மோசமான பாதிப்புகள் ஏற்படலாம் என்றும், அங்கு 24 மணி நேரத்தில் 20 மிமீ வரை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திரிபுரா, அசாம், மிசோரம், மணிப்பூர், நாகலாந்து ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலட்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் வரும் 26ம் தேதி வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புயலை முன்னிட்டு இன்றும், நாளையும் வடக்கு வங்காள விரிகுடா பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தலையும் வழங்கி உள்ளது. புயலானது, மேற்கு வங்காளத்தின் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படுத்த கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.