குழந்தைகளுக்கு வீட்டில் இருக்கும் ஆபத்துகளும்… தடுக்கும் வழிமுறைகளும்…

பெரிய டேபிள் போட்டு அதன் மீது அலங்காரத் துணியை விரித்து, தொலைக்காட்சிப் பெட்டியை வைத்திருப்போம். குழந்தை அந்த துணியை இழுத்து, இழுத்து விளையாடி ஒரு கட்டத்தில் தொலைக்காட்சிப் பெட்டி நழுவி விழக்கூடும்.

சென்னையில் இப்படி தொலைக்காட்சி பெட்டி விழுந்து குழந்தை இறந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதேபோல் தொலைக்காட்சி பெட்டியை அதன் எடைக்கேற்ற ஸ்டாண்டில் வையுங்கள். எடை குறைந்த, சக்கரங்கள் கொண்ட டீப்பாயில் தொலைக்காட்சி பெட்டியை வைக்க வேண்டாம்.

வாஷிங்மிஷின் எந்திரத்தை திறந்து வைக்காதீர்கள். எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும் இயல்புகொண்டது குழந்தை. எனவே உள்ளே இறங்கி கதவை மூடிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். டேபிள் பேனின் சுழற்சி குழந்தைகளை வசீகரிக்கும் இன்னொரு ஆபத்து. சுழலும் விசிறிகளுக்கு இடையே கையை நுழைக்க வேண்டும் என நினைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே நெருக்கமான கம்பித்தடுப்புகள் இருக்கும் டேபிள் பேன்களையே வாங்குங்கள்.

அப்படியே வாங்கினாலும், அதைத்தொட்டு விளையாட குழந்தைகளை அனுமதிக்காதீர்கள். டேபிள் பேனை போலவே எரியும் சுடர் விளக்கும் குழந்தைகளின் ஆவலைத் தூண்டக்கூடிய ஒன்று. இந்த வசீகரம் குழந்தையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எனவே சுடர் விளக்கு, எரியும் மெழுகுவத்தி ஆகியவற்றை குழந்தையின் கைக்கு எட்டாத உயரத்தில் வையுங்கள்.

குழந்தைகளின் பள்ளி உணவு டப்பாக்களில் விக்கிக்கொள்ளும் அளவுக்கோ, தொண்டையில் சிக்கிக் கொள்ளும் அளவுக்கோ கடினமான, பெரிய அளவிலான உணவு பொருட்களை கொடுப்பதைத் தவிருங்கள். குறிப்பாக, பெரிய இறைச்சி அல்லது எலும்புத்துண்டுகளை கொடுத்து அனுப்ப வேண்டாம். பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடும்போது கண்காணிக்க ஆட்கள் இருப்பதில்லை. குழந்தைகள் தூங்கும்போதோ அல்லது வீட்டில் இல்லாதபோதோ இஸ்திரி போடுவது, மின்சாதனங்கள் பழுது பார்ப்பது, ஆசிட் ஊற்றிக் கழிப்பறையை கழுவுவது, வெள்ளையடிப்பது போன்ற பணிகளை செய்வது நல்லது.