காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீருடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். எலுமிச்சையில் வைட்டமின் சி, பிளாவனாய்டுகள், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. தேன், காயத்தை குணப்படுத்துவதற்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவக்கூடியது.
எனினும் இது எல்லோரும் பருகுவதற்கு ஏற்ற பானம் இல்லை என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இதுபற்றி ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்சா பாவ்சார் கூறுகையில், ”எலுமிச்சை சாறு, தேன் கலந்த நீர் உடலில் உள்ள கொழுப்பை உருக்குவதற்கு உதவும். ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது” என்று எச்சரிக்கை விடுக்கிறார்.
”காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து பருகுவது உடல் எடையை குறைக்க உதவும் என்பது பெரும்பாலானோர் கேள்விப்பட்ட விஷயம். ஆனால் உங்களில் எத்தனை பேர் இதை நம்புகிறீர்கள்? இந்த பானத்தை பருகியவர்களில் சிலர் தனக்கு உடல் எடை குறைந்திருப்பதாக கூறுகிறார்கள். சிலர் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்கிறார்கள். ஒருசில பக்கவிளைவுகளை அனுபவித்ததாக சிலர் கூறுகிறார்கள்” என்பவர், இந்த பானத்தை பருகுவதால் ஏற்படும் நன்மைகளையும், சிலருக்கு ஏற்படும் பக்கவிளைவுகளையும் பகிர்ந்து கொள்கிறார்.
நன்மைகள் * எலுமிச்சை மற்றும் தேன் கொழுப்பை எரிக்க, உருக வைக்க உதவும். ஆனால் இந்த பானத்தை பருகுபவர்கள் உடற்பயிற்சி செய்பவர்களாக இருக்க வேண்டும். உணவு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
* இந்த பானம் கல்லீரலில் சேரும் நச்சுத்தன்மையை போக்க உதவும்.
* அடிவயிற்றில் கொழுப்பு சேருவதை தடுக்கும். உடல் எடையை குறைப்பதற்கும் உதவும். யாரெல்லாம் பருகக்கூடாது? பலவீனமான பற்கள், பலவீனமான எலும்புகள், வாய் புண்கள் போன்றவை இருந்தால் இந்த பானத்தை பருகக்கூடாது. கீல்வாதம், அசிட்டிட்டி பிரச்சினை கொண்டவர்களும் உட்கொள்ளக்கூடாது.
கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
1. தண்ணீர் மிகவும் சூடாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் தேனை சூடான நீரில் சேர்த்தால் நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிடும். தண்ணீர் ஓரளவுக்கு சூடு குறைந்து வெதுவெதுப்பாக இருக்கும் சமயத்தில்தான் தேன் கலக்க வேண்டும். ஒரு டேபிள்ஸ்பூனுக்கு அதிகமாக தேன் சேர்ப்பதும் கூடாது.
2. எலுமிச்சை பழத்தில் பாதியைத்தான் பயன்படுத்த வேண்டும். உங்கள் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றால் முழுப்பழத்தையும் சாறு பிழிந்து கொள்ளலாம்.
3. ஆனால் இந்த பானம் உங்கள் உடலுக்கு ஒத்துக்கொள்கிறதா? என்பதை சில நாட்கள் பரிசோதித்து பார்க்க வேண்டும். ஏதேனும் அசவுகரியத்தை ஏற்படுத்துகிறதா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எப்படி கண்டறிவது? இந்த பானத்தை பருகியதும் எந்த அசவுரியமும் ஏற்படாது. குறிப்பாக நெஞ்செரிச்சல் உண்டாகாது. பற்களில் கூச்சமோ, புளிப்பு தன்மையோ தென்பட்டால் வாய் புண்ணுக்கு வழி வகுத்துவிடும். ஏதேனும் வித்தியாசமாகவோ, சங்கடமாகவோ, உணர்ந்தால் இந்த பானத்தை தவிர்க்க வேண்டும்.