40 வயதானவர்களை அதிகம் தாக்குகிறது: எலும்பு புரை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

ஓஸ்டியோபோரோஸிஸ்’ என்பது எலும்பு புரை நோய். இந்த நோய் எலும்பை கொஞ்சம், கொஞ்சமாக உருக்குவதோடு மட்டும் நின்று விடுவதில்லை. அவற்றோடு கழுத்து மற்றும் முதுகுவலியையும் உருவாக்கும்.

இந்த ‘ஓஸ்டியோபோரோஸிஸ்’ நோய் ஆண்களை காட்டிலும் பெண்களையே அதிக அளவில் பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக 40 வயதை கடந்த பெண்கள் மாதவிடாய் இறுதி நாட்களின்போது அதாவது ‘மெேனாபாஸ்’ காலகட்டத்தில் இருக்கும் பெண்களையே இது அதிக அளவில் பாதிக்கிறது. ஆரம்பகட்ட அறிகுறிகளை தெரிந்து கொண்டவுடன் உடனடியாக அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தற்காலத்தில் நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் முதுகுவலி மற்றும் கழுத்து வலி ஏற்படுவது சாதாரண பிரச்சினையாக மாறி விட்டது. இதற்கு காரணம் எலும்பு தேய்மானம் என்று கூறுவர். இதனை தடுக்க என்ன செய்யலாம்?. எலும்புப்புரை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் என்ன? என்பது குறித்து நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி எலும்பு முறிவு சிறப்பு நிபுணர் டாக்டர் கண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தை இங்கே காண்போம்! எலும்பு புரை நோய் மனித உடலில் உள்ள எலும்புகள் வலுவாக இருந்தால்தான் உடல் உறுதியாக இருக்கும். எலும்புகள் அடர்த்தி குறைந்தாலோ, தேய்மானம் அடைந்தாலோ உடல் வலுவின்றி உயிர் இருந்தும் இல்லாததுபோல் ஆகிவிடும்.

மனித உடலில் எலும்பு தொடர்பான நோய்கள் நிறைய உள்ளன. ‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச்செயல்’ என்பதுபோல எலும்பில் உள்ள பிரச்சினைகளை முதலில் அறிந்து அதனை சரிசெய்துகொள்ள வேண்டும். பொதுவாக 40 வயதை கடந்த ஆண், பெண் என இரு பாலரையும் எலும்பு புரைநோய் அதிகம் தாக்குகிறது.

மூன்றில் ஒரு பெண்ணுக்கும், ஐந்தில் ஒரு ஆணுக்கும் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வு சொல்கிறது. மாதவிலக்கு பிரச்சினை உள்ள பெண்களுக்கு கர்ப்பப்பையை நீக்கும்போது ஹார்மோன் சுரப்பிகள் சுரக்காமல் நின்று விடும். அப்போது பெண்களுக்கு இந்த எலும்பு புரை நோய் ஏற்படும். அதேபோல சிறுவயதிலேயே புகைப்பிடிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட பழக்கங்களைகொண்ட ஆண்களையும் இந்த நோய் எளிதில் தாக்கும். நோய் தாக்கியவர்களின் எலும்புகள் அடர்த்தி குறையும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தைராய்டு, முடக்குவாதம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு புரை நோய் எளிதில் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் செரிமான கோளாறு காரணமாக உட்கொள்ளும் உணவில் உள்ள கால்சியம் உடலில் சேராமல் இருத்தல், டாக்டரின் அறிவுரை இல்லாமல் ‘ஸ்டீராய்டு’ மாத்திரைகளை சாப்பிடுவது உள்ளிட்ட காரணங்களினாலும் இந்த நோய் பாதிப்பு ஏற்படும். எளிதில் உடையும் எலும்புகள் மனித உடலில் பெரும்பாலும் குறுக்கு தண்டுவடம், இடுப்பு, மணிக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எலும்புகள் எளிதில் உடையும் தன்மைகொண்டவை. தண்டுவட எலும்பு உடையும்போது கால்கள் செயல்படாமல் பக்கவாதம் ஏற்படும்.

எனவே எலும்புகளை பாதுகாக்க பழகிக்கொள்ள வேண்டும். தற்போதுள்ள உணவு பழக்க முறைக்கு நம் உடலை பரிசோதனை செய்துகொள்வது அவசியம். 40 வயதானவர்கள் உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பரிசோதனை செய்வது போல ‘டெசா’ என்னும் எலும்பு பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும். நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் நம் அன்றாட வாழ்வில் எளிய வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் எலும்பு புரை நோயை கட்டுப்படுத்தலாம்.

அதிகாலை வெயில் உடலில் படும்படி இருந்தால், வைட்டமின் ‘டி’ சத்து உடலுக்கு கிடைக்கும். இதன் மூலம் செரிமான கோளாறு ஏற்படாது. எலும்புகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். உடல் உழைப்பு இல்லாதவர்கள் நடைப்பயிற்சி செய்வது, தண்டால் எடுப்பது உள்ளிட்ட எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம்.

இதுதவிர பச்சை காய்கறிகளை சாப்பிடலாம். ராகி, கேப்பை உள்ளிட்ட கால்சியம் சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். எலும்பு புரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் டாக்டர்களின் ஆலோசனைப்படி வைட்டமின் ‘டி’, கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.