ஃபேஷியலின் முதல் படி, க்ளென்சிங். ஒரு பவுலில் காய்ச்சாத சுத்தமான பாலை எடுத்துக்கொண்டு, அதில் பஞ்சை நனைத்து, முகத்தில் வட்டவடிவில் மசாஜ் செய்வது போன்று செய்யவும். இப்படி இரண்டு, மூன்று முறை முகம் முழுக்க மசாஜ் செய்தபடி அழுக்கை துடைத்து எடுக்கவும்.
தினமும் கூட பால் கொண்டு இப்படி க்ளென்ஸ் செய்யலாம். பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கும். க்ளென்சிங் செய்து நான்கு நிமிடங்களுக்குப் பிறகு காட்டன் துணியைக் கொண்டு முகத்தை ஒற்றி எடுக்கவும். பின் ஸ்கிரப் செய்யவேண்டும். அதற்கு, பொடித்த சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றை எடுத்துக்கொள்ளவும். 2 டீஸ்பூன் பொடித்த சர்க்கரையுடன் 2, 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
இதனை முகத்தில் அப்ளை செய்த பின், மென்மையாக தேய்த்து மசாஜ் செய்வது போல ஸ்கிரப் செய்யவும். கவனிக்க… சர்க்கரை சருமத்தை பதம் பார்த்துவிடாமல் மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். கண்ணின் அடிப்பகுதியில் மசாஜ் செய்ய வேண்டாம். கழுத்துக்கும் சேர்த்து ஸ்கிரப் செய்யலாம்.
ஸ்கிரப் செய்த பின்னர், மேலிருந்து கீழ்நோக்கித் துடைக்கவும். நன்றாகப் பழுத்த பப்பாளியை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பப்பாளியை முகம் முழுவதும், கண்ணுக்கு அடியில், கழுத்தில் என வட்டவடியில் மசாஜ் செய்வது போல அப்ளை செய்யவும். பின் கழுத்துப் பகுதியில் கீழிருந்து மேல்நோக்கி 20 முறை மசாஜ் செய்யவும். தாடைப் பகுதியில் 10 முதல் 20 முறை வரை மேல்நோக்கி மசாஜ் செய்யவும்.
கன்னம் பகுதியில் காதுவரை மசாஜ் செய்யவும். பின் மூக்கில் இரண்டு புறமும் விரல்களை வைத்து மசாஜ் செய்யவும். கண் பகுதிக்கு வட்ட வடிவில் நடுவிரல் கொண்டு மசாஜ் செய்யவும். பின், கண்களின் பக்கவாட்டுப் பகுதியான பொட்டுப் பகுதியில் விரல்களை வைத்து எடுக்கவும். மசாஜ் செய்த பின் முகத்தில் ஊடுருவக்கூடிய காட்டன் துணியான காஸ் (gauze) போடவும். அதன் மேல் பேக் போட வேண்டும்.
பேக் ரெடி செய்ய, நல்ல பழுத்த வாழைப்பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். அதனை மை போல அரைத்து எடுத்துக்கொண்டு, அதனுடன் தூய்மையான தேன் ஒரு டீஸ்பூன், ஆரஞ்சு ஜூஸ் ஒரு டீஸ்பூன், தயிர் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதனை, முகத்தில் போடப்பட்டிருக்கும் காஸ் மீது அப்ளை செய்து கொள்ளவும்.
முகம் முழுவதும் அப்ளை செய்த பின் அதன் மீது சில்வர் ஃபாயில் கொண்டு மூடிவிடவும், 10 நிமிடங்களுக்குப் இந்த இந்த சில்வர் ஃபாயிலை எடுத்துவிட்டு, உள்ளிருக்கும் காஸ் துணியை நீக்கவும். முகத்தை துடைத்துக் கொள்ளவும். பின் முகத்தை தண்ணீரில் கழுவிக்கொள்ளவும். முகம் அவ்வளவு மென்மையாக, பளிச்சென்று ஆனதை உணர்வீர்கள்.