உணவு கருவுற்ற பெண் மூன்று ‘G’ நிறைய சாப்பிட வேண்டும். Green leaves – கீரை வகைகள் Green vegetables – பச்சைக் காய்கறிகள் Grains – முழு தானியங்கள் முழு தானியங்கள் என்றால் அதிகம் பாலிஷ் போடாத கோதுமை மற்றும் அரிசி சாதம், கஞ்சி போன்றவை நல்லது.
புழுங்கலரிசி உபயோகிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மல்லிகைப் பூ போன்ற பச்சரிசி சாதம், சத்தில்லாத சக்கைதான். அதிக refine செய்யப்பட்ட ஆட்டா, மைதா போன்றவற்றில் இயற்கையான நார்ச்சத்து இருக்காது.அதிக காரம், மசாலா பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. கருவுற்ற தாய் நிறையப் பழங்கள் சாப்பிட வேண்டும்.
இது மலச்சிக்கலைத் தவிர்க்கும். அன்னாசி, பப்பாளி போன்றவை உடலுக்கு நல்லது. கருவுற்ற தாயின் தோல் வறண்டு அல்லது அதிக எண்ணெய்ப் பசையாக மாறலாம். இதற்குத் தேவையான மாய்ஸ்சரைஸர்கள் அல்லது லோஷன் பயன்படுத்தலாம். சாதாரண தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது. நிறைய கெமிக்கல் அடங்கிய மேல் பூச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. அவற்றால் ஒவ்வாமை ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை எடுக்கவேண்டி வந்தால் வீணான மன உளைச்சல்தானே! சிலருக்கு தோலில் ஏற்படும் மாற்றங்கள் பிரசவம் ஆன பிறகு தானாக சரியாகிவிடும்.
ஹார்மோன் மாறுதல்களாலும் தோலில் பாதிப்புகள் ஏற்படலாம். தினமும் குளிப்பது மிக மிக முக்கியம். தண்ணீர் கிடைத்தால் தினம் இரண்டு முறை! தன் சுத்தம் பேணுதல், தோல் நோய்கள் வராமல் பாதுகாக்கும். புத்துணர்ச்சியையும் தரும். அந்தக் காலத்தில் விசாலமான வீடு, முற்றம், கொல்லை என்று நல்ல காற்றோட்ட வசதி இருந்தது. வெந்நீர் போட வீட்டுக்கு வெளியில் அடுப்பு இருக்கும். அதிலிருந்து வரும் புகை வீட்டுக்குள் அதிகம் வராது. யாருக்கும் பாதிப்பு இருக்காது. இந்தச் சின்ன வீட்டில் புகைமூட்டம் இருந்தால் எல்லோருக்கும் சுவாசக் கோளாறு வரும். அதிலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அதிக பாதிப்பு இருக்கும்.