ராமாயண கதையை மையமாக வைத்து ஆதிபுருஷ் படம் தயாராகி உள்ளது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் வீடியோ கேம் போல் இருப்பதாகவும் ராவணனை தவறாக சித்தரித்து இருப்பதாகவும் பலர் கண்டித்தனர். இப்படம் வருகிற ஜனவரி மாதம் 12-ந்தேதி வெளியாக உள்ள நிலையில் ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த படத்தின் விஎப்எக்ஸ் காட்சிகளை உலகத் தரத்தில் உருவாக்கவும் சர்ச்சையை ஏற்படுத்திய காட்சிகளை சரி செய்யவும் படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆதிபுருஷ் படத்தை ஏப்ரல், மே மாதங்களில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.