பிரான்ஸில் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிவித்தபடி, நவம்பர் மாதம் முதல் குடும்ப ஆதரவு கொடுப்பனவு 50 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவிப்பணம் மூலம் இப்போது 800,000 குடும்பங்களுக்கு மேல் பயனடைவதாக தெரியவந்துள்ளது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும் ஒற்றை பெற்றோரை நோக்கமாகக் கொண்டு இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த உதவியானது ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களுக்கு மேலதிகமாக, பெற்றோர்களின் உதவியை இழந்த பிள்ளைகளை பராமரிக்கும் நபர்களுக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கம் கொண்டதாகும்.
இந்த உதவியால் ஏற்கனவே பயனடையும் குடும்பங்கள் இம்முறை இதனை பெறுவதற்காக மேலதிகமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை 50 சதவீத அதிகரிப்புடன் புதிய கொடுப்பனவு அமுலுக்கு வரும் என அரசாங்க அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், ஏற்கனவே முதல் முறையாக கோரிக்கை விடுத்த குடும்பங்களுக்கு, நவம்பர் மாதம் வங்கி கணக்கில் இணைக்கப்படும். ஒன்று அல்லது இரு பெற்றோரின் உதவியின்றி சொந்தமாக ஒரு குழந்தையை வளர்க்கும் அனைத்து நபர்களுக்கும் சோதனை இல்லாமல் இந்த உதவி வழங்கப்படுகிறது.
இந்த கொடுப்பனை பெற பிரான்ஸில் வசிக்க வேண்டும் மற்றும் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவராக இருந்தால் சட்டப்பூர்வ குடியிருப்புக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது மட்டுமே கட்டாயமாகும்.
ஒருவர் பொறுப்பேற்கும் பிள்ளைகள் அல்லது குழந்தைகள் வெளிநாட்டில் பிறந்திருந்தால், அவர்கள் பிரான்ஸில் வாழ்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நிரூபிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.