பிறந்த குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்வது உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. ஒரு சரியான எண்ணெய் மசாஜ், குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது.
வயிற்று வலிக்கு நல்ல ஒரு சிகிச்சையாக உள்ளது, குழந்தையின் உடல் வளர்ச்சியை வேகப்படுத்துகிறது. எண்ணெய் மசாஜ் மூலம் குழந்தையின் வளர்ச்சியை அதிகரிப்பது பெற்றோர் கையில் மட்டும் தான் உள்ளது. குழந்தைகளுக்கு இயற்கையான எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்வதால் அவர்களின் சரும ஆரோக்கியம் மேம்படும். தசை மற்றும் எலும்புகள் வலுப்பெறும்.
குழந்தைக்கும் அன்னைக்குமான பாசம் அதிகரிக்கும். குழந்தையின் நாசுக்கான சருமத்தில் ஏதாவது ஒரு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது குழந்தையின் சருமத்தில் தவறான பாதிப்புகளைத் தரும். எந்த ஒரு எண்ணெயையும் குழந்தைக்கு தடவுவதற்கு முன்னர், குழந்தையின் கை அல்லது கால் பகுதியில் ஒரு சிறிய பகுதியில் தடவி, சோதித்து, ஒரு மணி நேரம் கழித்து தடிப்பு, ஒவ்வாமை போன்ற எந்த ளரு பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்து பின்னர் முழு உடலிலும் தடவலாம்.
குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்குத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும்போது, அதில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தில் தொற்று மற்றும் வறட்சி ஏற்படாமல் காக்கும். சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய்யை உபயோகப்படுத்தினால் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பாதாம் எண்ணெய் தோல் நோய்கள் உண்டாகாமல் காக்கும்.
சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளின் சருமம் வறண்டதாக இருந்தால், விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். நகங்கள் மற்றும் தலை முடிக்கும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம். இதனால் தலைமுடி மற்றும் விரல்கள் மிகவும் பளபளப்பாக மாறுகின்றன. குழந்தையின் உடலில் விளக்கெண்ணெய் தடவி, 10-15 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.
குழந்தைக்கு மசாஜ் செய்ய ஆலிவ் எண்ணெய் மிகவும் ஏற்றது. ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் குழந்தையின் தசை வேகமாக வளர்ச்சி அடைகிறது. ஆனால் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி குழந்தைக்கு மசாஜ் செய்யும்போது சில விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தைக்கு தோல் அழற்சி, வெட்டு அல்லது தடிப்புகள் இல்லாமல் இருக்கும்போது மட்டும் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தவும். வறண்ட மற்றும் சென்சிடிவ் சருமம் கொண்ட குழந்தையின் சருமத்திற்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது .