கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கோவை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. தினசரி 8 முதல் 10 வாகனங்களில் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு மாதமாக இதன் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. தற்போது தினசரி ஒன்று முதல் 2 வாகனங்களில் மட்டுமே சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.
இதன் காரணமாகவே சின்ன வெங்காயம் விலை திடீரென அதிகரித்தது. இந்த நிலையில் இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.90-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து வெங்காய மொத்த வியாபாரி தண்டபாணி கூறியதாவது:- கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30-க்கு மட்டுமே விற்கப்பட்டது.
ஒரு கிலோ சின்ன வெங்காயம் உற்பத்தி செய்வதற்கு ரூ.20 வரை செலவு ஆகிறது. ஆனால் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் அவதிப்பட்டனர். இதையடுத்து பெரும்பாலான விவசாயிகள் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்வதை திடீரென நிறுத்திவிட்டனர். இதன் காரணமாகவே தட்டுப்பாடு ஏற்பட்டு சின்ன வெங்காயம் விலை அதிகரித்து உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.