சமையலில் உணவுக்கு சுவை கூட்டுவதற்காகவும், நிறத்துக்காகவும், வாசனைக்காகவும் சேர்க்கப்படும் சில மூலிகைகள், உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை அளிப்பவையாக இருக்கின்றன. அவற்றைப் பற்றிய தொகுப்பு இங்கே…
பார்ஸ்லி: பார்ஸ்லி தோற்றத்தில் கொத்தமல்லி போன்று இருக்கும். இதன் இலை, விதை, வேர் என அனைத்தும் உணவுக்கு சுவை கூட்டுவதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது. பார்ஸ்லி விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், அழகு சாதனப் பொருட்கள், சோப், ஷாம்பு, வாசனைத் திரவியங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. இதில், ஆன்டி-ஆக்ஸிடண்டுகள், கரோட்டினாய்டுகள், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. பார்ஸ்லியில் இருக்கும் சத்துக்கள் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது. செரிமானத்தை சீராக்குகிறது. சிறுநீர் உற்பத்தியை பெருக்குகிறது. மேலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
பிரிஞ்சி இலை: பிரிஞ்சி இலை எனப்படும் பிரியாணி இலையை, பச்சையாக எடுத்து தேநீர் தயாரித்து பருகி வரலாம். இதனால் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு பிரிஞ்சி இலை மிகவும் பயனுள்ளது. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள், வைட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
லெமன் கிராஸ்: லெமன் கிராசில் போலிக் அமிலம், பொட்டாசியம், தாமிரம், தயாமின், இரும்புச்சத்து, துத்தநாகம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதைக்கொண்டு தேநீர் தயாரித்துக் குடிக்கலாம். இதனால், உயர் ரத்த அழுத்தம் குறையும். புற்றுநோய் செல்கள் அழியும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். கல்லீரல் சுத்தமாகும். பூஞ்சைத் தொற்று குறையும். இந்த புல்லில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யைத் தோல் பாதிப்புகளுக்குத் தடவலாம். பொடுகு பிரச்சினை இருப்பவர்கள் லெமன் கிராஸ் எண்ணெய்யை தினமும் தடவி வந்தால் நாளடைவில் பொடுகுத் தொல்லை குறைவதுடன், முடி வளர்ச்சி அதிகரிக்கும். இந்த எண்ணெய்யில் விளக்கேற்றும்போது, கொசு தொல்லை நீங்கும்.
ஓரிகானோ: இது ஒரு சுவையூட்டி. இந்த மூலிகையைப் பசுமையாக மட்டுமின்றி, காய்ந்த நிலையிலும் பயன்படுத்தலாம். ஓரிகானோவை உணவில் சேர்த்துவந்தால் இருமல், பதற்றம், தலைவலி, ஒழுங்கற்ற மாதவிடாய், பல் வலி ஆகியவை நீங்கும். வயிறு மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் தீரும். ரோஸ்மேரி: புதினா குடும்பத்தைச் சேர்ந்த ரோஸ்மேரி, வாசனை மூலிகைகளில் ஒன்று. இதை தேநீராகத் தயாரித்துக் குடிக்கும்போது மனச்சோர்வு நீங்கி, புத்துணர்வு கிடைக்கும். தூக்கமின்மை பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். இதில், வைட்டமின் பி6 நிறைந்துள்ளது. இதனால் நினைவாற்றல் மேம்படும். தசை வலி நீங்கும். குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கும். மூளையின் உணர்ச்சிகள் சமநிலை அடையும்.