பெருமாளை வழிபட உகந்த நாட்களில் ஒன்று, ஏகாதசி. இந்த நாளில் பெருமாளை வழிபாடு செய்தால் பலன்கள் இரு மடங்காகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மாதம் இரண்டு ஏகாதசிகள் என்று, வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். சில வருடம் 25 ஏகாதசிகள் கூட வருவதுண்டு. இந்த ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. அந்த வகையில் இந்த மாதம் ஐப்பசியில் வரும் ஏகாதசிகளுக்கு பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசி விரதங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
இந்திர ஏகாதசி
ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை, ‘இந்திர ஏகாதசி’ என்பார்கள். இந்த ஏகாதசி விரதம், நாரதர் மூலமாக வெளிப்பட்டது. புராண காலத்தில் இந்திரசேனன் என்ற மன்னன், மாஹிஷ்மதி என்ற நகரை ஆட்சி செய்தான். ஒருநாள் அவனது அரசவைக்கு நாரத முனிவர் வருகை தந்தார். அவரை வரவேற்று அமரச் செய்த மன்னன், நாரதர் வந்ததற்கான காரணத்தைக் கேட்டறிந்தான். அதற்கு நாரதர், “நான் எமலோகம் சென்றிருந்தபோது, உன்னுடைய தந்தையை சந்தித்தேன். அங்கு நரகத்தில் அவர் கடும் துன்பத்தை அனுபவிக்கிறார். அவர் என்னிடம், ‘என் மகனிடம் கூறி, இந்திர ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளச் செய்யுங்கள். அப்படிச் செய்தால், நான் இந்த நரகத்தில் இருந்து விடுபடுவேன். என்னை கரையேற்றும்படி அவனிடம் கூறுங்கள்’ என்று சொல்லியனுப்பினார். அதற்காகவே நான் வந்தேன்” என்றார்.
அதைக் கேட்ட மன்னன், தந்தையின் நிலை அறிந்து வருந்தினான். தொடர்ந்து தன் தந்தையின் ஆன்மா துன்பத்தில் இருந்து விடுபடுவதற்காக, இந்திர ஏகாதசி விரதம் மேற்கொள்ள முடிவு செய்தான். அதற்கான வழிமுறைகளை நாரத முனிவரிடம் இருந்துகேட்டு, அதன்படியே செய்தான். இதனால் அவனது தந்தை நரக வேதனையில் இருந்து விடுபட்டு சொர்க்கம் சென்றார்.
இந்த இந்திர ஏகாதசி விரதத்தை மேற்கொண்டால், முன்னோர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும். மேலும் முன்னோர்களின் ஆன்மா, நரகத்தில் துன்பம் அனுபவித்து வந்தால், அவர்களின் சந்ததியினர் செய்யும் இந்திர ஏகாதசி விரதத்தின் காரணமாக, அந்த துன்பத்தில் இருந்து விடுபடுவார்கள்.
பாபாங்குசா ஏகாதசி
ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு, ‘பாபாங்குசா ஏகாதசி’ என்று பெயர். ஒருவருடைய பாவத்தை அகற்றும் அங்குசம் போன்றது என்பதால், இந்தப் பெயர் வந்தது. இந்த விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு, கங்கை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால், யாகங்கள், உயர்ந்த தான – தர்மங்கள் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன்கள் அனைத்தும் கைவரப்பெறும்.
இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், நரக வேதனையை அனுபவிக்க மாட்டார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. ஐப்பசி ஏகாதசி நாளில், ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கும் வழிமுறை தெரியாமலோ, அல்லது மற்றவர்கள் வியந்து பார்க்க வேண்டும் என்றோ, எப்படிச் செய்தாலும், இந்த விரதத்திற்கான பலன் கிடைக்கப்பெறும் என்பதே, பாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மேன்மையாகும்.