உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வியல் சூழல் என்பது நோயற்ற உடலையே குறிக்கிறது. பல்வேறு விதமான தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து வரும் இவ்வுலகில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தற்போது மாறி வரும் உணவுப்பழக்கம் வெவ்வேறு வகைகான நோய் காரணிகளை உருவாக்கி விடுகின்றன.
இவ்வாறு உருவாகும் நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும். நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை (குளுக்கோஸ்) எரிக்கப்பட்டு உடலுக்கு சக்தியாக மாற்றப்படுகிறது. இதற்கு உடலில் உள்ள கணையம் என்கிற சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோன் முக்கியமானது. இது சுரக்காமல் இருந்தாலோ, போதுமான அளவில் சுரக்காமல் போனாலோ அல்லது சுரந்தும் எதிர்ப்பு தன்மை காரணமாக பயன்படாமல் போனாலோ நீரிழிவு நோய் வந்து விடுகிறது.
ஆகவே தற்போது பல்வேறு காரணங்களால் சர்க்கரை நோய் என்கிற நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. இதில் இந்தியா தற்போது 2-வது இடத்தில் உள்ளது. இந்த சூழலில் உலக நீரிழிவு கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவை இணைந்து 1991-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதியை உலக நீரிழிவு தடுப்பு தினமாக அறிமுகப்படுத்தின.
இதையடுத்து 2006 ஆம் ஆண்டு இந்நாளை ஐ.நா சபை அதிகாரபூர்வமாக அறிவித்தது. நீரிழிவு நோயானது முதல்வகை, 2-வது வகை, 3-வது வகை என பிரிக்கப்படுகிறது. இதில் முதல் வகை நோயான நீரிழிவானது குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கே அதிகம் ஏற்படுகின்றது. இரண்டாவது வகையில், கணையத்தில் இருந்து சுரக்கப்படும் இன்சுலின் போதிய அளவு சுரக்காததாலோ அல்லது சுரக்கும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகிறது. மேலும் இந்த வகை நீரிழிவு நோயே 90 சதவீதம் மக்களுக்கு உண்டாவதாக தகவல்கள் கூறுகின்றன.
மூன்றாவது வகை என்பது பெண்களின் கர்ப்பகாலத்தில் ஏற்படுவதாகும். இந்த வகை நீரிழிவானது 2 முதல் 4 சதவீத பெண்களுக்கு கர்ப்பக் காலத்தின் போது உருவாகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்தாலும், சிறிது காலத்திற்குபின் குழந்தைக்கும், தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும் என்றும் ஆய்வு கூறுகிறது. இவ்வாறு உருவாகும் நீரிழிவு நோயின் தாக்கம் உள்ள போது உடலில் ஏற்படும் சிறு,சிறு நோய்கள்கூட பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு உயிரிழப்பையும் உண்டாக்கி விடுகின்றன.
2014-ம் ஆண்டு உலக அளவில் 422 மில்லியன் மக்களுக்கும், 2015-ம் ஆண்டு இந்தியாவில் 69.1 மில்லியன் மக்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நோய் முதியவர்கள் மத்தியில் 70 சதவீத இறப்பை நிகழ்த்துவது குறிப்பிடத்தக்கது. தற்போது 199 மில்லியன் பெண்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நீரிழிவு நோயினால் ஆண்டுக்கு 2.1 மில்லியன் பேர் இறப்பை சந்திக்கின்றனர். இத்தகு அபாயகரமான பாதிப்பை நிகழ்த்தி கொண்டிருக்கும் நீரிழிவு நோயை பற்றி இந்நாளில் நாம் அறிந்து கொள்வதோடு, அது பற்றிய விழிப்புணர்வை அனைவரிடத்திலும் ஏற்படுத்திட உறுதியோடு செயல்படுவோம்.