ஏழுமலையான் கோவிலில் கடந்த 3 நாட்களாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து 40 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் வார இறுதி நாட்கள் முடிந்தும் திருப்பதியில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரமாகிறது. இன்று காலை தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அலிப்பிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீநிவாசம் கெஸ்ட் ஹவுஸ் மற்றும் ரெயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள டைம் ஸ்லாட் கவுண்டர்களில் டோக்கன் பெற்று சென்றனர்.
அவர்களுக்கு 10 மணி நேரத்தில் தரிசன நேரம் ஒதுக்கப்பட்டது. இலவச தரிசனத்திற்கு 24 அறைகளிலும் பக்தர்கள் காத்துள்ளனர். திருப்பதியில் பரவலாக மழை பெய்து கடும் குளிர் வீசுகிறது. குளிரை பொருட்படுத்தாமல் பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். திருப்பதியில் நேற்று 73,323 பேர் தரிசனம் செய்தனர். 29,464 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.85 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.