ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீண்டும் கைப்பற்றும் நடவடிக்கை ஒன்றை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களுடன் இணைந்து நடவடிக்கையை ஆரம்பித்துள்ள சந்திரிகா
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு சென்று அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளவர்களுடன் இணைந்து அவர் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.
இது சம்பந்தமான முதலாவது கூட்டம் அமைச்சர் மகிந்த அமரவீரவின் வீட்டில் நடந்தது. அந்த கூட்டத்தில் சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, சாந்த பண்டார ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
இறுதியில் முன்னாள் ஜனாதிபதி சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த யோசனையை துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ண ஆகியோரே முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை காலையில் அமைச்சர் மகிந்த அமரவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசியுள்ளார்.
மாலை வாருங்கள் சந்திக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி பதிலளித்துள்ளார். இதனையடுத்து ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை தவிர ஏனையோர் முன்னாள் ஜனாதிபதியின் கொழும்பில் உள்ள வீட்டுக்கு சென்று அவரை சந்தித்துள்ளனர்.
மைத்திரி ஜனாதிபதியாக பதவிக்கு வர உதவியதே நான் செய்த மிகப்பெரிய தவறு
இதன் போது கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, “ எனக்கு மைத்திரிபால, தயாசிறி ஆகியோரை பிடிக்கவே பிடிக்கவில்லை.மைத்திரிபாலவை ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வர நான் உதவியதே நான் எனது அரசியல் வாழ்வில் செய்த மிகப் பெரிய தவறு.
அவர் கட்சியை சர்வாதிகாரத்தை நோக்கி கொண்டு சென்றார். சஜித் பிரேமதாசவுக்கு முட்டுக்கொடுக்க பார்க்கின்றார். நான் கட்சியின் யாப்பை மாற்ற முயற்சிக்கவில்லை. தலைவர் பதவிக்கு வேறு யாராவது வந்து விடுவார்கள் என்ற பயம் கொண்டவர்களே கட்சியின் யாப்பை மாற்றுவார்கள்” எனக் கூறியுள்ளார்.
அப்போது, “ நீங்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவீர்களா?” என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, “நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். ஆலோசகர் என்ற வகையில் கட்சியை காப்பாற்ற தலையிடுவேன்” எனக்கூறியுள்ளார்.