வடகொரியாவில் பிறக்கும் பிள்ளைகளுக்கு மிருதுவான பெயர்களை சூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்த நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன், நாட்டுப்பற்றை வெளிக்காட்டும் பெயர்களை சூட்ட உத்தரவிட்டுள்ளார்.
அன்பை பிரதிபலிக்கும் பெயர்கள் இனி தேவையில்லை என குறிப்பிட்டுள்ள கிம் ஜோங் உன் Chong Il (துப்பாக்கி), Chung Sim (விசுவாசம்), Pok Il (வெடிகுண்டு) and Ui Song (செயற்கைக்கோள்) உள்ளிட்ட பெயர்களை சூட்ட வேண்டும் என கூட்டுகொண்டுள்ளார்.
மேலும், மென்மையான பெயர்கள் அனைத்தும் தென் கொரியாவை சார்ந்தது எனவும், அது இனி நமக்கு தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டின் இறுதிக்குள் தங்கள் பெயர்களை மாற்றிக்கொள்ளாதவர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது எனவும் கிம் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து பொதுமக்களை தங்கள் பெயர்களை மாற்றிக்கொள்ளுமாறு உள்ளூர் அதிகாரிகள் நெருக்கடி அளிப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த மாதத்தில் இருந்தே, இது தொடர்பான அறிக்கைகளை கிம் நிர்வாகம் மக்களுக்கு அளிக்க தொடங்கியுள்ளது.
கிம் நிர்வாகத்தின் கிடுக்குப்பிடியால் அதிருப்தி அடைந்துள்ள வடகொரிய மக்கள், அதிகாரிகள் தங்களுக்கு மீண்டும் தொல்லை தந்தால், தங்கள் பிள்ளைகளுக்கு பட்டினி, பஞ்சம், ஒடுக்குமுறை என பெயரிடுவோம் என கோபத்தில் கூறியுள்ளனர்.