சபரிமலை ஐயப்பன் தியானபிந்து ஆசனத்தில் அபயசின் முத்திரையிலும், கிருஹ நாரீய பீடாசனத்தில் யோகப் பிராணா முத்திரையிலும், குத பாத சிரேஷ்டாசனத்தில் அபான பந்த முத்திரையிலும், அஷ்ட கோண சாஸ்தாசனத்தில் யோக பத்ராசனத்திலும் அருள்பாலிக்கிறார். இப்படி நான்கு ஆசனத்தில் நான்குவித முத்திரையுடன் அருள்பாலிப்பது ஐயப்பன் மட்டும்தான்.
ஐயப்பன் லிங்க வடிவில் ஆண் தன்மையாகவும், சங்கு வடிவில் பெண் தன்மையாகவும் இரண்டறக்கலந்து உலக உயிர்கள் அனைத்தையும் காக்கும் காவலனாக விளங்குகிறார். ஐயப்பன் சிவனைப்போல் தியான கோலத்திலும் விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகும். மன அமைதி, தெளிந்த சிந்தனை, எதையும் சாதிக்கும் மன ஆற்றல், அஷ்டமாசித்தி ஆகியவற்றை இந்த ஆசனம் தரும்.
யோக நிலையில் காலை வைத்து, வயிற்றை அழுத்தி, மூச்சை அடக்கி, குண்டலினி சக்தியை மேலெழுப்பி, அந்த சக்தியை ஞான சக்தியாக மாற்றி, தனது திறந்த கண்கள் மூலம் பக்தர்களை பார்த்து அவர்களுக்கு ஆசி வழங்கும் நிலையில் இருப்பதால் தான் தன்பக்கம் பக்தர்களை இவ்வளவு அதிகமாக ஈர்க்க முடிகிறது.
ஐயப்பன் தன் வலது கையில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் முத்திரையையும், இடது கையில் ஜீவாத்மா பரமாத்மாவின் பாதத்தை சரணடையும் தத்துவத்தையும் குறிக்கிறார். அதாவது மனிதன் இறைவனை சரணடைந்தால் அவனுடன் கலந்து விடலாம் என்பதை ஐயப்பனின் முத்திரை குறிக்கிறது. இந்த ஆசனத்தை சாதாரண மனிதர்கள் செய்வது கடினம்.