யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் இம்மாதம் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர (Premalal Jayasekara) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (5-12-2022) நடைபெற்ற பாதீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து முதல் விமானம் இலங்கைக்கு வரவுள்ளது.
இலங்கையின் 3வது சர்வதேச விமான நிலையமாக பலாலி சர்வதேச விமான நிலையம் 2019 ஒக்டோபர் 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில் தற்போது மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.