”ஹிஜாமா என்ற ‘கப்பிங் தெரபி’ என்பது கண்ணாடி கப்பை வைத்து செய்யப்படும் பண்டைய கால சிகிச்சை முறை. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில், இது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. அங்கிருந்துதான், மற்ற உலக நாடுகளுக்கும் பரவியது.
ரொம்ப காலமாகவே புழக்கத்தில் இருக்கும் ஹிஜாமா சிகிச்சை, விளையாட்டு வீரர்கள் மூலமாகவே, உலகெங்கும் பரவ தொடங்கியது. ”நம் உடலில் நான்கு வகையான திரவங்கள் உள்ளன. அவை ரத்தம், சளி, மஞ்சள் பித்தம் மற்றும் கரும் பித்தம். இதில் கரும் பித்தம் தான் நச்சுத்தன்மை உடையது. இது உடலுக்கு பல்வேறு தீமைகளை உண்டாக்குகிறது.
இதை உடலில் இருந்து வெளியேற்றும்போது நன்மைகள் கிடைக்கும். கூடவே, உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அதை சுறுசுறுப்பாக்கவும் இந்த கப்பிங் தெரபி பயன்படுகிறது. பொதுவாக, நம் தேவைக்கு ஏற்ப கை மற்றும் கால் பகுதி, முதுகுப்பகுதி, தோள்பட்டைப்பகுதி, தலைப்பகுதி ஆகிய இடங்களில் இந்த ‘கப்பிங் தெரபி’ செய்யப்படும். இதிலிருந்து கழிவுகள் வெளியேற்றப்படும்போது, உடலும், உறுப்புகளும் புத்துணர்ச்சி பெறும்” என்றவர், இதன் மூலம் உண்டாகும் சுவடுகள், ஓரிரு நாட்களிலேயே காணாமல் போய்விடும் என்றார்.
இப்படி உடலில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்படும்போது உடல் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இயங்கும். விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் உடல் சோர்வு, கை-கால் வலிகளுக்கு இது சிறந்த தீர்வாக அமையும் என்றார். ”கப்பிங் தெரபியில் நிறைய வகைகள் இருக்கிறது.
பேம்பூ கப்பிங், ஐஸ் கப்பிங், பயர் கப்பிங், ஆயில் கப்பிங், சிலிக்கான் கப்பிங், மேக்னட் கப்பிங், டிரை கப்பிங், வெட் கப்பிங்…. ஒவ்வொரு தேவைகளுக்கும், ஒவ்வொரு கப்பிங் முறைகள் பின்பற்றப்படுகின்றன. கை, கால் வலி, உடல் வலி, தூக்கமின்மை, மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி, முடக்கு வாதம், மூட்டு வீக்கம், வயிற்றுப் புண், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், முதுகு வலி மற்றும் மூட்டு வலி, கீழ்வாதம், மாதவிடாய் பிரச்சினைகள், கால் நரம்பு வலி… இப்படி ஹிஜாமாவில் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு தீர்வு உள்ளது. அத்துடன் கப்பிங் தெரபி மூலம் ‘பேசியல்’ செய்யும் பழக்கம் அதிகரித்து வருவதாக கூறினார். முன்பெல்லாம், நம் கிராமங்களில் ஒரு பழக்கம் இருந்தது.
அதாவது இடுப்பு பிடித்துக்கொண்டால், சொம்பில் ஒரு காகிதத்தையோ அல்லது கற்பூரத்தையோ கொளுத்தி போட்டு அப்படியே வலி இருக்கும் இடத்தில் அப்பிவிடுவார்கள். அது காற்று அழுத்தம் காரணமாக அப்படியே ஒட்டிக்கொள்ளும். வலி சரியான பிறகு அல்லது வாயு பிடி அவிழ்ந்த பிறகுதான், அந்த சொம்பு கீழே விழும். இதைதான் ‘பயர் தெரபி’யாக, இப்போது செய்கிறார்கள். ‘கராத்தே கிட்’ திரைப்படத்தில், ஜாக்கிசான் செய்வதும் அப்படிப்பட்ட ‘பயர் தெரபி’தான்.
சீனாவில் இதை தலைச்சிறந்த வலி நிவாரணியாக பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்திருக்கும், இந்த கப்பிங் தெரபிக்கு, சீனர்கள்தான் நவீன அப்டேட்டுகளை கொடுப்பவர்கள். அவர்கள், இந்த சிகிச்சை முறையினால் பலவிதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிறார்கள்.