வேலூரைச்சேர்ந்த சித்த மருத்துவரும் இம்ப்காப்ஸ் இயக்குனருமான டி.பாஸ்கரன் கூறியதாவது:- மூட்டு வலியைப் பொறுத்தவரை மூட்டுகளில் (கீல்) வலியின் ஆதிக்கம் அதிகரித்து நோய் உண்டாகும். மூட்டுகளில் வீங்குவது, குத்துவது, நோவது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி கால்களை மடக்கவும், நீட்டவும், அசைக்கவும் முடியாமல் செய்யக்கூடியது இந்த மூட்டு வலி. 60-70 வயதில் ஏற்பட்ட இந்நோய் தற்போதைய சத்தற்ற உணவு மற்றும் நீரின் காரணமாக சிறு வயதினரையும் பாதிக்கிறது.
இதுபோன்ற சூழலில் முடக்கத்தான் இலைச்சாற்றையும் விளக்கெண்ணெயையும் சம அளவு எடுத்து கலந்து காய்ச்சி வடிகட்டி சர்க்கரை சேர்த்து வேளைக்கு ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம். இதை தினமும் இரண்டு தடவை வீதம் சாப்பிட்டால் முழங்கால் வலி தீரும். வாதநாராயணன் இலைகளை நிழலில் காயவைத்துப் பொடியாக்கி தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் வாதநோய்கள் விலகும்.
நொச்சிஇலை (5), மிளகு (5) போன்றவற்றை நீர் விடாமல் அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து வெந்நீர் கலந்து சாப்பிடுவது நல்லது. இதைச் சாப்பிட்டால் ஓரிரு வேளையிலேயே வாய்வு பிடிப்பு நீங்கிவிடும். சிற்றரத்தையை பால் விட்டு அரைத்து பாலில் கரைத்துக் காய்ச்சி வடிகட்டிச் சாப்பிடலாம். இதனுடன் தகுந்த அளவு சர்க்கரை சேர்த்து தினமும் இரண்டுவேளை பருகி வந்தால் வாத நோய் விலகும். மூட்டு வீக்கம் கைப்பிடி அளவு வாதநாராயணன் இலையுடன் ஆறு மிளகு, சிறிது உப்பு சேர்த்து இடித்து சாறு பிழிந்து தினமும் காலையில் அருந்த வேண்டும். இதை 10 நாட்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் வாத வீக்கம் மற்றும் குடைச்சல் நீங்கும்.
கட்டுக்கொடியின் வேர், சுக்கு, மிளகு போன்றவற்றை 5 கிராம் வீதம் எடுத்து சிதைத்து குடிநீராக்கி அருந்தினால் வாத வலிகள் தீரும். இதேபோல் முருங்கை ஈர்க்கினை சிதைத்து நீர் விட்டுக் காய்ச்சிக் குடித்தால் உடல் வலி மற்றும் அசதி தீரும் உணவு முறைகள் மூட்டு வலி, வாத நோய்களால் வரக்கூடிய மூட்டுவலிகளுக்கு நாம் உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். மலக்கட்டு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கிழங்கு வகைகளைத் தவிர்த்து உளுந்து, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சி, நாட்டுக்கோழி, முட்டை போன்றவற்றைச் சேர்க்கவும். கீரை, பச்சைக் காய்கறிகள், பிரண்டைத் துவையல், முருங்கைக்கீரை மற்றும் அதன் பூ போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
பாதாம், அக்ரோட், பேரீச்சம்பழம், நல்லெண்ணெய் போன்றவையும் நல்லது. மூட்டுவலிக்கு எண்ணெய் துத்தி இலை, குப்பைமேனித் தழை, சோற்றுக் கற்றாழை, கோவை இலை போன்றவற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து தனித்தனியாக இடித்து சாறு பிழிய வேண்டும். இத்துடன் 750 மில்லி அளவு வேப்பெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவினால் வாத வலி நீங்கும். தழுதாழை இலையை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது விளக்கெண்ணெய் கலந்து வதக்கி மூட்டுவலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
மூன்று நாட்கள் தொடர்ந்து ஒத்தடம் கொடுத்தால் மூட்டு வலி நீங்கும். பழங்கள் உணவில் வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்து கருப்பட்டி, வெல்லம் சேர்க்க வேண்டும். செக்கில் ஆட்டிய எண்ணெய் பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கேழ்வரகு, சாமை, தினை போன்ற சிறுதானிய உணவுகளையும் மூங்கிலரிசியையும் பயன்படுத்த வேண்டும். முருங்கைக்காய், முருங்கைக் கீரை, பூண்டு, முடக்கத்தான், தேங்காய், நெல்லிக்காய், கைக்குத்தலரிசி சேர்க்கவும். பழங்களில் சப்போட்டா, மாதுளை, அன்னாசி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வெள்ளாட்டுக்கறி, வெள்ளாட்டு கால்கள் சிறந்த உணவு. குறிப்பாக நீர் வடிவமாக எடுத்துக் கொள்ளும்போது தேவையான புரதச்சத்து கிடைக்கும். இரவில் ஊற வைத்த கருப்பு எள்ளினை காலையில் வெறும் வயிற்றில் உண்ணலாம். பாசிப்பருப்பு சுண்டல், கொண்டைக்கடலை சுண்டலை மாலையில் எடுத்துக்கொள்ளலாம். வெளிப் பிரயோகம் வேம்பு, புங்கன், இலுப்பை, நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற ஐங்கூட்டு எண்ணெய் 10 கிராம் எடுத்து அதனுடன் ஐந்து பழுத்த எருக்கு இலை, பச்சைக் கற்பூரம் சேர்த்து காய்ச்சி பூசினால் வலி உடனே குறையும்.
100 மில்லி நல்லெண்ணெயுடன் பூனைக்கண் குங்கிலியம் 10 கிராம் சேர்த்துக் காய்ச்சி பூசலாம். தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி அதில் கற்பூரம் சேர்த்து பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் உளுந்துடன் ஒரு டீஸ்பூன் ஆவாரை இலைப் பொடி நீர் சேர்த்துப் பற்றிடலாம். இவற்றையெல்லாம் முறைப்படி செய்தால் மூட்டு வலியில் இருந்து விடுபடலாம்.