காலத்துக்கேற்றார்போல பல புதிய புதிய உடற்பயிற்சி முறைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், Battle rope exercise என்ற பயிற்சி முறை பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இரண்டு நீளமான, மிகவும் தடிமனான கயிறுகளை சுழற்றி செய்யும் பயிற்சி இது. இந்தக் கயிறுகள், சமீபகாலமாக உடல் உறுதிக்கான உடற்பயிற்சி முறைகளில் Battle rope exercises என்ற பெயரில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.
‘மிக எளிதாகவும், குறுகிய காலத்தில் விரும்பிய தசைக்கட்டமைப்பை பெற விரும்பும் ஒருவர், ஜிம்மில் மேற்கொள்ளும் மற்ற எடை தூக்கும் பயிற்சிகளுக்கு பதில் இந்த Battle rope பயிற்சிகளை மேற்கொள்ளலாம்’ என்கின்றனர் பயிற்சியாளர்கள். இன்று பெரும்பாலான உடற்பயிற்சிகளில் நாம் பயன்படுத்தும் கருவிகள், உடலில் புவி ஈர்ப்பு விசைகளை அதிகரிப்பதன் மூலம், உடலியல் ரீதியான விளைவுகளை உருவாக்குகின்றன.
உதாரணமாக, ஒரு பாடி பி்ல்டர் அவரது தசைகளை வடிவமைக்க முயற்சி செய்கிறார் என்றால், புவியீர்ப்பு அடிப்படையிலான டம்பிள்ஸ், கெட்டில்பெல் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்திதான் பயிற்சி செய்ய முடியும். ஓட்டப் பயிற்சியாளர் தனது வேகத்தை அதிகரிப்பதற்கு தேவையான நரம்புகளின் நீட்சித்தன்மைக்கும், இதேபோன்ற புவியீர்ப்பு அடிப்படையிலான எடை தூக்கும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், ரோப் பயிற்சி, இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது.
இப்பயிற்சியில் ஒரு நபர், புவியீர்ப்பு விசை மற்றும் அலைசக்தி இரண்டையும் வெவ்வேறு திசைகளில் செலுத்துவதால், மிக வேகமாக தசைகள் உறுதி அடைகின்றன. உடலியல் முனைப்பில் (Physiological pursuit) ஒரு புது முயற்சியான ரோப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் இரட்டிப்பு பலனை அடைய முடியும். அதாவது, இரட்டைச் செயல்திறன் மற்றும் கட்டுப்பாடான இயக்கம் காரணமாக இலக்கினை வேகமாக அடையலாம்.
மற்ற பயிற்சிகளைக் காட்டிலும், உடலுக்கு அதிக உறுதி, எலும்புகளுக்கு நீட்சித்தன்மை மற்றும் ஆற்றல் கிடைக்கிறது. இருவேறு சக்திகளால் உருவாகும் ஆற்றல், உடலின் வலுவிழந்த பகுதிகளை பலப்படுத்துகின்றன. கைகளுக்கு பிடிப்பு, தோள்கள், இடுப்பு, முழங்கால்கள், கால்கள் மற்றும் உள்ளுறுப்புகள் இவற்றோடு மனமும் வலுவடைகிறது. ரோப் பயிற்சியின்போது அலைசக்தியை எந்தஅளவிற்கு உபயோகிக்கிறீர்களோ அந்த அளவிற்கு உடலின் பிடிப்பு ஆற்றல் மற்றும் நீட்சியை அதிகரித்துக் கொள்ள முடியும். உடற்பயிற்சி இயக்கங்கள் உடலின் அனைத்து பகுதிகளிலும் நிலைத்தன்மை, வலிமை, ஆற்றல் மற்றும் நீடித்த தன்மையை கொடுப்பதாக இருக்க வேண்டும்.
ரோப் பயிற்சிகளில், வலுவான பிடிப்பு ஏற்படுவதால், தோள், உள்ளுறுப்புகள், இடுப்பு, முழங்கால், கால் மற்றும் கணுக்கால் என அனைத்து இயக்கங்களிலும் வியத்தகு முன்னேற்றம் காண முடியும். ரோப் பயிற்சியின் போது கயிறுகளில் அலைகளை உருவாக்கும்போதோ, கயிறுகளை இழுக்கும் போதோ அல்லது உயர்த்தும் போதோ உடலின் நிலைத்தன்மையை (Stability) அதிகரிக்க முடியும்.
இப்பயிற்சியை தொடர்ந்து செய்து வரும்போது, உடலின் நரம்பு, இதயம், நுரையீரல் மற்றும் எலும்பு அமைப்புகளில் நிலைத்தன்மையை அதிகரிக்க முடியும். அதிகப்படியான ஆற்றலை செலவழிக்கவும், நுரையீரல் மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் ஒரு 10 நிமிடம் ரோப் பயிற்சியே போதுமானது. ரோப் பயிற்சியை மட்டும் செய்தாலே, மற்ற எல்லா பயிற்சிகளையும் செய்வதால் கிடைக்கும் அனைத்து பலன்களையும் பெற முடியும்.