ஞாபக மறதி நோய் ‘டிமென்ஷியா’ மற்றும் ‘அம்னீஷியா’ என்று இரு வகைகளில் அடங்கும். ‘அம்னீஷியா’ என்பது மூளையில் ஏற்படும் பக்கவாத பாதிப்புகள், மூளைக்காயங்கள், மூளைக்கட்டிகள், வலிப்புகள் இவற்றை தொடர்ந்து ஏற்படும். கடந்த கால, நிகழ்கால ஞாபக மறதியைக் குறிக்கும் ‘டிமென்ஷியா’ வில் ஞாபக மறதி, மன அழுத்தம், பழக்கவழக்க மாற்றங்கள், கனவுகள் இவை காணப்படும். இது அல்சீமர் நோய் பாதிப்பு, பார்க்கின்சன் நோய், மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் ஏற்படும் பாதிப்பு, டோபமைன், செரட்டோனின் குறைபாடு போன்ற காரணங்களால் வருகிறது.
ஆனால் திடீர் ஞாபக மறதி ‘டோர்வே எபக்ட்’ எனப்படும். நம் கண் முன்னால் ஒரு பொருள் இருந்தும் அவசர கதியில் அதைக் கவனிக்காமல் எங்கே வைத்தோம் என்று தேடுவது, கையில் கொண்டு செல்லும் பொருளை எங்காவது வைத்துவிட்டு, பிறகு அதைத் தேடுவது, ஏற்கனவே அறிமுகமான நபரைத் திடீரென பார்த்தவுடன் அவரது பெயர் நினைவுக்கு வராமல் சமாளிப்பது, போன்றவை இந்த திடீர் ஞாபக மறதியில் வந்துவிடும். ஞாபக மறதிக்கு சித்த மருத்துவத்தில் உள்ள மருந்துகள்:
1) பிரமி நெய் 5 மி.லி. வீதம் காலை, இரவு சாப்பிடலாம்,
2) வல்லாரை மாத்திரை 2 காலை, இரவு எடுக்க வேண்டும்.
3) அமுக்கரா லேகியம் 2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.
4) நெல்லிக்காய் லேகியம் 2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.
5) சங்கு புஷ்ப மலர்களை டீ போட்டு குடிக்கலாம். இவை மூளை நரம்புகளுக்கு சிறந்த பலனைத் தரும்.
6) அக்கரகாரம் என்ற மூலிகை வேரிலிருந்து எடுக்கப்படும் `பைரித்ரின்’ நரம்பு களுக்கு உற்சாகத்தை தருகிறது. வல்லாரை, பிரமி கீரை, துளசி செடி இவைகளில் வகைக்கு இரண்டு இலைகளை எடுத்து இரவு முழுவதும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை குடித்து வர மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
ஞாபக சக்தி பெருகும். வெண்டைக்காய், நெல்லிக்காய், எலுமிச்சை, புதினா, கேரட், திராட்சை, ஆப்பிள், பேரீச்சை, முட்டை, பசலைக்கீரை, பாதாம் பருப்பு, வால்நட், முருங்கைக்காய் போன்றவைகளை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெர்ரி வகைப் பழங்கள், பூசணி விதைகள், பாதாம், வால்நட், வேர்க்கடலை இவைகளில் உள்ள விட்டமின் ஈ, விட்டமின் டி, ஒமேகா-3, துத்தநாகம் போன்றவைகள் ஞாபகசக்தியை அதிகப்படுத்துகின்றன. உடற்பயிற்சி, தியானம், பிரார்த்தனைகள் நல்லது.