மாரடைப்பு ஏற்ப்பட்ட ஒருவருக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள்

மாரடைப்பு
இன்றைய காலத்தில் மாரடைப்பு என்பது இளம்வயதினர் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் வேலை மற்றும் குடும்ப சுழல் மற்றும் மாறி வரும் உணவு பழக்க முறையே ஆகும். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டவுடன் அருகில் இருப்பவருக்கு பதட்டத்தில் என்ன செய்வது என்று புரிவதில்லை.

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவருக்கு எந்த மாதிரியான முதலுதவிகளை செய்ய வேண்டும் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள், உயிருக்கு ஆபத்தாகி விடுகிறது. எனவே மாரடைப்புக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.

மாரடைப்பு மற்றும் மார்பு வலிக்கான வித்தியாசம்
இது இரண்டு வகைப்படும். ஒன்று மாரடைப்பு மற்றொன்று மார்பு வலி இந்த இரண்டுக்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளது. ஒரு சிலருக்கு இதன் வித்தியாசம் புரிவதில்லை. மார்பில் வலி ஏற்பட்டவுடன் அது மாரடைப்பு என முடிவு செய்து விடுகின்றனர்.

மார்பு வலி ஒருவருக்கு ஏற்பட்டால் அது 15 நிமிடங்களுக்கும் குறைவாகவே இருக்கும். இந்த வலியால் இதய தசைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதுவே மாரடைப்பு ஏற்பட்டால் 20-30 நிமிடங்கள் வரை வலி நீடிக்கும். இதய தசைகளுக்கும் பெரிய சேதத்தை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாரடைப்பின் அறிகுறிகள்
மார்பு பகுதியில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போன்று திடீரென்று தாங்கமுடியாத வலி நெஞ்சின் நடுவே ஏற்படுவது அல்லது கத்தியால் குத்துவது போன்று மார்பில் வலி ஏற்படுவது அல்லது இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுவது, உடனே குமட்டிக்கொண்டு வாந்தி வருதல், அதனால் ஏற்படும் படபடப்பு, காரணம் இல்லாமல் வியர்த்துக் கொட்டுவது, தலைசுற்றல் மற்றும் உடல் தளர்ச்சியுடன் கூடிய சோர்வு ஆகியவை மாரடைப்பின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.

மாரடைப்பு ஏற்பட்டவருக்கு செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சைகள்
மூச்சுவிட வசதி செய்து கொடுத்தல்
பாதிக்கப்பட்ட நபர் நல்ல காற்றை சுவாசிக்க ஏதுவாக காற்றோட்டமாக விடுங்கள். அவரை சுற்றி மற்றவர்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க வேண்டும். அவருக்கு தேவையான காற்று தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும்.

பாதிக்கபட்டவரை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுதல்
பாதிப்பு ஏற்பட்ட நபரை படுக்க வைக்கவும், அவர் இறுக்கமான உடை அணிந்திருந்தால் உடைகளைத் சற்று தளர்த்த வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு சுவாசம் இருக்கிறதா என நெஞ்சில் கை வைத்தோ, மூக்கின் துவாரத்தில் காது வைத்தோ அல்லது உள்ளங்கையில் பின்புறத்தை வைத்தோ உறுதி செய்ய வேண்டும்.

ஆஸ்பிரின் மாத்திரை கொடுத்தல்
சுவாசம் இருப்பது உறுதி செய்தவுடன் நாக்கின் அடியில் ஆஸ்பிரின் (Aspirin) மாத்திரையை, சோர்பிட்ரேட் (sorbitrate) மாத்திரயுடன் சேர்த்து வைத்து விடவும். இது உறைந்த இரத்தத்தை சரி செய்து இதயத்திற்கு சீராக இரத்த ஓட்டத்தை பாய்ச்சும். மேலும் உடனே தாமதிக்காமல் இதய சிறப்பு மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.

செயற்கை சுவாசம் கொடுத்தல்
ஒருவேளை பாதிக்கப்பட்டவர் சுவாசிக்க முடியாத நிலையில் இருந்தால் அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் தலையைப் பின்பக்கம் கை கொண்டு உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி உயர்த்தி மூச்சுக்குழலை நேராக இருக்குமாறு செய்து பாதிக்கப்பட்டவரின் மூக்கின் இரு துவாரங்களையும் அழுத்தி மூடிக்கொண்டு, பாதிக்கப்பட்டவரின் வாயோடு உங்கள் வாயைப் பொருத்திக் மெதுவாக காற்றை உட்செலுத்து வேண்டும். இப்படியாக செயற்கை சுவாசம் தர வேண்டும்.

உரிய சிகிச்சை அளித்தல்
அதே போல, மருத்துவ மனையில் நோயாளியின் வயது, மாரடைப்பு ஏற்பட்ட தாக்கத்தின் அளவு, இதயம் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது, மற்றும் இரத்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மாறுபடும். பல நேரங்களில் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க தெளிவான மற்றும் முறையான வழிமுறைகள் அவசியமாகின்றன. அவை கரோனரி ஆஞ்சியோப்ளாட், பலூன்களைக் கொண்டு இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்தல் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முறைகள் தேவைப்படலாம்.

மேற்கண்ட முதலுதவி விஷயங்களை நீங்கள் சரியான முறையில் பின்பற்றினால் உயிருக்கு போராடும் ஒருவரின் உயிரை உங்களாலும் காப்பாற்ற முடியும்.