மாவிலை தோரணம் கட்டுவது ஏன் தெரியுமா?

மாவிலை தோரணம்
வீட்டின் தலைவாசலை நாம் எப்போதும் மங்களகரமாகவும். அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மாவிலை தோரணம் என்பது லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த ஒன்றாகும்.

வீட்டில் நடக்கும் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளிலும், சடங்குகளிலும், பண்டிகைகளிலும், பூஜைகளிலும், கோயில் திருவிழாக்களிலும் இப்படி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மாவிலைத் தோரணம் இல்லாமல் இருப்பதில்லை. பல சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றக்கூடிய நாம், மாவிலை வீட்டு வாசலில் தோரணமாகவும், பூஜைகளின் போதும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.

மாவிலை அழகிற்காக மட்டும் நாம் வாசலில் கட்டுவதில்லை. அறிவியல் ரீதியாகவும் மாவிலையை வாசலில் , சுப நிகழ்ச்சிகளில் போன்ற பல இடங்களில் கட்டுவது உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும். மாவிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் நிறைந்துள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நம் வீட்டிற்கு வருவதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளை சரிசெய்ய மாவிலை பயன்படுகிறது. மாவிலைக்கு எதற்காக இவ்வளவு முக்கியத்துவம் என்பதை பார்ப்போம்.

மாவிலையை ஏன் பயன்படுத்த வேண்டும்

தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று மாவிலை தோரணம் முக்கியமான ஒன்றாகும்.

மாவிலையில் மகாலட்சுமி வசிப்பதால், துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு என்பது ஐதீகம்.

மாவிலையை வாசலில் 11 அல்லது 21 இலைகள் என்ற எண்ணிக்கையில் கட்டுவது சிறந்தது.

மாவிலைத் தோரணம் கட்டப்பட்ட வீடுகளில் தேவர்கள் நுழைவதால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் பிறக்கும்.

மாவிலைகளில் மஞ்சள், குங்குமம் இடுவதால் ஏற்படும் ஒருவித காந்த சக்தியானது கெட்ட சக்திகளை தடுத்து தெய்வீக சக்திகளை வீட்டில் பரவச் செய்யும் தன்மை கொண்டது. அதனால்தான் சுப நிகழ்ச்சிகளில் மாவிலை பயன்படுத்தப்படுகிறது.

விழாக்களின் போது மாவிலை தோரணம் கட்டுவதால், விழாவுக்கு வரும் பக்தர்களின் எதிர்மறை எண்ணங்கள் நீக்கி புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருக்கும். காய்ந்த மாவிலையாக இருந்தாலும் அதன் சக்தி குறைவது இல்லை.

மாவிலையானது கரியமில வாயுவான கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.

அதனால்தான் மாவிலைகளை வீட்டில் தோரணங்களாகவும். பூஜைகளிலும், மக்கள் ஒன்று கூடும் இடங்களிலும் தோரணமாக கட்டி பயன்படுத்துகின்றனர்.

மேலும் மாவிலைகள் காற்றை சுத்தம் செய்து நமக்கு புதிய உற்சாகத்தை கொடுக்கிறது.

மாவிலை காய்ந்த பிறகும் வெகு நேரம் ஆக்சிஜனை வெளியிட்டுக் கொண்டிருக்கும்.

மாவிலை சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டு நம்மை நோயிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

வாஸ்து கடவுளான மயனுக்கு உகந்த மரம் மாமரமாகும். வீட்டில் ஏதேனும் வாஸ்து குறைபாடு இருந்தால் அதனை முற்றிலும் அழிக்கும் சக்தி மாவிலைக்கு உண்டு என்பதன் காரணமாகவே மாவிலையானது அனைத்து நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.