சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது ஜாதகத்தில் நன்றாக இருக்கிறதா, அல்லது எதாவது தோஷம் இருக்கிறதா என கேட்பார்கள். அப்படிப்பட்ட தோஷங்களில் ஒன்று சர்ப்ப தோஷம், அல்லது நாக தோஷம் ஆகும். நீண்ட நாட்களாகத் திருமணம் தடைபடுகிறதா, திருமணம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லையா, சர்ப்பதோஷம் காரணமாக இருக்கும், போய் பரிகாரம் செய்யுங்கள் என்பார்கள் ஜோதிடர்கள்.
சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷத்தை எவ்வாறு அறிவது?
ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களை பாம்புகள் என்று சொல்கிறார்கள். ராகு, கேது ஆகிய கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைச் ‘சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம்’ என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
நாக தோஷம் எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் முன் ஜென்மத்தில் ஆண் நாகமும், பெண் நாகமும் ஒன்றாக இணைந்து இருக்கும் பொழுது அதை துன்புறுத்தி இருந்தால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு 7ம் இடத்தில் ராகு என்ற கருநாகம் நின்று தோஷத்தை எற்படுத்தும்.
பாம்பு உணவு தேடி செல்லும் பொழுது அதை துன்புறுத்தினால் அவரது தொழில் ஸ்தானமான லக்னத்துக்கு 10ம் இடத்தில் ராகுவோ, கேதுவோ நின்று, தொழில் ஸ்தானத்துக்கு தோஷத்தை உருவாக்குவார்கள். பாம்பு குஞ்சு பொரிக்கும் காலத்திலோ தனது குட்டிகளுடன் இருக்கும் பொழுதோ துன்புறுத்தி இருந்தால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு 5ம் இடமான புத்திர ஸ்தானத்தில், ராகுவோ, கேதுவோ நின்று நாக தோஷத்தை ஏற்படுத்துவார்கள்.
சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் ஏன் ஏற்படுகிறது?
நமக்கு இந்த பிறவியில் நாக தோஷம் வரக் காரணம் நாம் முற்பிறவியில் செய்த கர்ம வினைகளே ஆகும். முற்பிறவியில் பெரியோர்களை துன்புறுத்தினாலோ அல்லது இரண்டு பாம்புகள் இணைந்திருக்கும் போது அவற்றைக் கொல்ல முயலும்போது ஒன்றை மட்டும் கொன்றால் (இன்னொன்று தப்பித்துவிட்டால்) அது மிகக்கொடூரமான பாவமாகும். இப்பாவம் செய்தவர்கள்தான் மறுபிறவியில் லக்னத்தில் ராகு அல்லது கேது தனியாக இருக்குமாறு பிறக்கின்றனர்.
சர்ப்ப அல்லது நாக தோஷத்தை போக்கும் பரிகாரங்கள்
1. தங்கம் நிரம்பிய குடம் அல்லது தெய்வீகம் நிறைந்த பொருட்களுடன் கும்பம் வைத்து வழிபட்டால் தோஷம் நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்.
2. உப்பை காணிக்கையாக செலுத்தினால் சர்ப்ப தோஷம் விலகி உடல் நலம் பெறும்.
3. மஞ்சளை காணிக்கையாக செலுத்தினால் சர்ப்ப தோஷத்தின் வீரியத்தன்மை நீங்கும்.
4. மிளகு, கடுகு, சிறு பயிறு போன்றவற்றை நைவேத்தியமாக செலுத்தினால் சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபட்டு ஆரோக்கிய வாழ்வு பெறலாம்.
5. மஞ்சள் பொடி கலந்து பால் நைவேத்தியம் படைத்தால் தோஷத்தினால் எற்ப்பட்ட குறைகள் நீங்கி குழந்தை பேறு கிடைக்கும்.
6. தோஷ பரிகாரத்திற்கு மஞ்சள் பொடி காணிக்கை, பால் – பழம், பால் பாயாசம், அப்பம், இளநீர், பூக்கள், அவல் நைவேத்தியம் செய்ய வேண்டும்.
நாக தோஷதிற்க்கான பரிகார ஸ்தலங்கள்
1. சர்ப்ப தோஷம் நீங்க ராகுத் தலமான திருநாகேஸ்வரம், கேது ஸ்தலங்களான ஸ்ரீ காளகஸ்தி, பெரும்பள்ளம் ஆகியவை உள்ளன. இரண்டு கிரகங்களையும் சேர்த்து வழிபடும் சிறப்பான தலமாக திருப்பாம்புரம் விளங்குகிறது. இங்கு முறையான பரிகார பூஜை செய்தால் நாக தோஷம் விலகும்.
2. குன்றத்தூரில் சேக்கிழார் ஏற்படுத்திய திருத்தலம் ராகு பகவானுக்குரிய பரிகாரத்தலமாக அமைந்துள்ளது. ராகு மற்றும் கேதுவின் பிடிக்குள் மற்ற ஏழு கிரகங்களும் அகப்பட்டு தன் பலத்தை இழப்பது பெரிய தோஷம் அது. இத்தோஷம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து ராகுகால பூஜையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்தால் தோஷ நிவர்த்தியடைந்து நன்மை பெறலாம்.
3. காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகேயுள்ள தலத்தில், மாகாளன் எனும் நாகம் காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்தது. இக்கோயிலின் மூலவர் மகாகாளேஸ்வரர் ஆவார். இது, ராகு-கேது பூஜித்த ஸ்தலம் ஆகும். இங்கு வழிபட்டு வந்தால் சர்ப்ப தோஷம் விலகும்.
4. ஆதிசேஷன் பூஜித்து அருள் பெற்ற தலமும் சென்னை திருவெற்றியூரில் அமைந்துள்ள ஸ்ரீவடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரர் வணங்கினால் ராகு-கேதுவால் உண்டான தோஷம் விலகும்..