சர்வதேச அளவில் இன்றைய இளைய தலைமுறை சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக இது உள்ளது. புதிதாக திருமணம் ஆனவர்கள் மட்டுமின்றி திருமணமாகி சில ஆண்டுகள் கழித்தவர்கள் கூட இந்த பிரச்சினையை சந்திக்கிறார்கள். இதற்கு மருந்துகளைத்தாண்டி உடல், மனம், உணவு, உடற்பயிற்சி போன்றவை மிகவும் முக்கியமாகும். இதுகுறித்து விரிவான விளக்கத்தைப்பார்ப்போம். மனித உடலானது உணர்வுகளால் பின்னிப்பிணைந்தது.
அன்பு, பாசம், மகிழ்ச்சி, கோபம், கவலை, பயம் போன்ற மனதின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக உடல் உள்ளது. பசி, தாகம், ஓய்வு, தூக்கம் இவைகளைப் போன்று தாம்பத்திய வாழ்வும், உடலோடும், உள்ளத்தோடும் தொடர்புடைய ஒன்றாகும். இல்லற சுகத்திற்கு வயது ஒரு தடை அல்ல. மனமும், உடலும் ஒத்துழைத்தால் எந்த வயதிலும் இந்த சுகத்தை அனுபவிக்கலாம். பல ஆண்களுக்கு ஆரம்பகாலத்தில் தாம்பத்தியம் தொடர்பான அச்சம், சந்தேகங்கள் ஏற்படுகின்றது. சிலருக்கு தாம்பத்ய வாழ்வில் எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும், நாளாக நாளாக தாம்பத்தியத்தின் திருப்தியில்லாத நிலை ஏற்படுகிறது. இதனால் மன ரீதியாக பாதிப்பும், தொடர்ந்து உடலிலும் பிரச்சினைகள் வருகிறது.
ஆண்களின் பிரச்சினைகளில் மிக முக்கியமானது விறைப்புத்தன்மை குறைபாடு. இது நரம்பு, ஹார்மோன், உடல் நலக்குறைவு மற்றும் உளவியல் காரணிகளை அடிப்படையாக கொண்டது. சில அமினோ அமிலங்கள், உயிர்ச்சத்துக்கள், ஹார்மோன்கள் இல்லற வாழ்வில் திருப்தியைத் தருபவை. அதுதொடர்பான உணவுகள், பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம். எல்-ஆர்ஜினின் அமினோ அமிலம்: இது ரத்தத்திலுள்ள நைட்ரிக் ஆக்சைடு அளவை சீராக்கி ஆண் உறுப்புக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்த அடைப்புகளை நீக்குகிறது.
இந்த சத்து சைவ உணவுகளில் பீட்ரூட், பூசணி விதைகள், சோயாபீன்ஸ், வேர்க்கடலை, பட்டர் பீன்ஸ், கடற்பாசிகள், பாதாம், பிஸ்தா, சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி அரிசிகளில் உள்ளது. அசைவ உணவுகளில் கோழி, வான்கோழி, சிகப்பு இறைச்சி வகைகள், மீன் வகைகளில் சூரை மீன், கணவாய், இறால், நண்டு, மற்றும் முட்டை, பால் இவைகளில் இந்த சத்து அதிகமாக உள்ளது. எல்- கார்னிடைன்: இதுவும் ஒருவகை அமினோ அமிலம் ஆகும். இது ஆண்மை எழுச்சிக்கு காரணமானது. இந்த சத்து, சிகப்பு இறைச்சி வகைகள், கோழி இறைச்சி, பால், வெண்ணெய், முட்டை, சூரை மீன், சுறா மீன், மத்திச் சாளை, கணவாய், பீட்ரூட், பூசணி விதைகளில் உள்ளது.
எல் சிட்ருலின்: இந்த அமினோ அமிலம் இயற்கையாகவே உடலில் உற்பத்தியாகக்கூடியது. இது உடலில் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரித்து, ரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறது, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. தர்ப்பூசணி, ஆரஞ்சு, சாக்லேட், எலுமிச்சை பழங்களில் இது அதிகமாக உள்ளது. எல் டைரோசின்: இந்த அமினோ அமிலம் அதிகரிக்கும்போது உடலில் ‘டோபமைன்’ அளவும் கூடுகிறது. இது மனதுக்கும், உடலுக்கும், உற்சாகம், நம்பிக்கையை தருகிறது. இது தன்னம்பிக்கைக்குரிய ஹார்மோன் ஆகும். பூசணி விதைகள், எள் இவற்றில் இந்தச்சத்து போதுமான அளவு உள்ளது. புரோமிலென்: இந்த என்சைம் வாழைப்பழத்தில் அதிகளவு உள்ளது.
இது மனதில் தாம்பத்ய ஆசையை அதிகரிக்கிறது. பழங்களில் நேந்திர வாழைப்பழம், செவ்வாழைப்பழம் சிறந்தது. அவகோடா: இது விதைப்பை மரம் (Testicle Tree) என்று அழைக்கப்படுகிறது. இதிலுள்ள புரதங்கள் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. லைக்கோபீன்: இது தக்காளியில் உள்ள முக்கியமான அமினோ அமிலம், புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கம், வளர்ச்சி மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது, விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு தக்காளியில் உள்ள லைக்கோபீன் ஒரு அருமருந்து. ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள்: இவை உடலில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
பிளாக்ஸ் விதைகள், பாதாம், மத்திச் சாளை மீன், சூரை மீன், கணவாய் மீன் போன்றவற்றில் ஒமேகா அமிலங்கள் அதிகளவில் உள்ளது. உணவுகளில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, கேரட், பீட்ரூட், முருங்கை காய், முருங்கை கீரை, முருங்கை பூ-விதை, தூதுவளை கீரை, தாளிக்கீரை, பசலைக்கீரை, பேரிச்சை, அத்திப்பழம், மாதுளம்பழம், மாம்பழம், பலாப்பழம், துரியன் பழம், பாதாம், பிஸ்தா, முந்திரிபருப்பு, கடல் உணவுகளில் சூரை மீன், கணவாய், சிப்பி, நண்டு, வாளைமீன், சுறா, இறைச்சி வகைகளில் நாட்டுக்கோழி, வான்கோழி, கோழி முட்டை போன்றவை விறைப்புத்தன்மை குறைபாட்டை நீக்கி உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை தரும்.
கருப்புத் திராட்சையின் தோல் மற்றும் விதைகளில் உள்ள ‘ரெஸ்வெட்ரால்’ என்ற தாவர வேதிப்பொருள் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்த தமனிகளில் உள்ள அடைப்புகளை நீக்கி ரத்த சுற்றோட்டத்தை அதிகரிக்கிறது. வைட்டமின்களில் பி3, பி9, சி, டி, ஈ இவைகளில் குறைபாடு இருந்தாலும் தாம்பத்தியத்தில் பிரச்சினை வரலாம். ஆகவே இந்த உயிர்ச்சத்துக்கள் குறைவில்லாமல் பார்க்க வேண்டும்.
உணவு வகைகளில் மாப்பிள்ளை சம்பா அரிசி, கறுப்புக் கவுனி அரிசி, உளுந்து, வெந்தயம், புடலங்காய், கருப்பட்டி, பாதாம், முந்திரிபருப்பு, கேரட், பீட்ரூட், அறுகீரை, பசலைக்கீரை, பேரிச்சம் பழம், மாதுளம்பழம், வாழைப்பழம், வேர்க்கடலை, முட்டை, நாட்டுக்கோழி, கடல் உணவுகள் போன்றவை விறைப்புத்தன்மை குறைபாட்டை நீக்கும் சிறந்த உணவுகள் ஆகும்.
சித்த மருந்துகள்: சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் மூலிகைகளில், நெருஞ்சில், இந்தியன் ஜின்செங் என்றழைக்கப்படும் அமுக்கராக் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, பால் மிதப்பன் கிழங்கு, வாலுழுவை, பூமிசர்க்கரைக் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, மதனகாமப் பூ, குங்குமப் பூ, பூனைக்காலி விதை, சாலாமிசிரி, சாரப்பருப்பு இவைகள் நரம்புக்கு நல்ல வலுவைத் தந்து தாம்பத்தியத்தில் திருப்தியைத் தரும். சித்த மருந்துகளில் அமுக்கரா சூரணம் 1 கிராம், பூரண சந்திரோதயம் 100 மி.கி., நாகப்பற்பம் 100 மி.கி., முத்து பற்பம் 100 மி.கி. இவைகளை பால் அல்லது தேனில் மூன்று வேளை சாப்பிட வேண்டும். சாலாமிசிரி லேகியம் 1 கிராம் வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.
உடற்பயிற்சி: இதில் சைக்கிளிங் தான் முதலிடம் வகிக்கிறது. நீண்ட நேரம் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இடுப்பு தசைகள் மற்றும், ஆசன பகுதி தசைகளான இஸ்கியோகவர்னோசஸ், பல்போகவர்னோசஸ் தசைகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைப்பதால் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு சைக்கிள் ஓட்டுதல் நல்ல பலனைத் தரும். ஹெகல் பயிற்சி (Hegel Exercise). இது மிகவும் சிறப்பு வாய்ந்த பயிற்சி. இடுப்பின் இரு பக்கமும் கைகளை வைத்து உட்கார்ந்து எழும்புதல், இதை பத்து முறை செய்யலாம். மல்லாந்து படுத்து ஒவ்வொரு கால்களையும் வயிறு வரை மடக்கி பயிற்சி செய்வது, இதையும் பத்து முறை செய்ய வேண்டும்.
அடுத்து படுத்தபடியே இரு கால்களையும் முடிந்த வரை மேலே தூக்குவது. இவ்வாறு பத்து முறை செய்ய வேண்டும். இதனால் ஆண் உறுப் புக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், இடுப்பு தசைகள் உறுதியடையும். மற்றும் புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கம் குறைந்து நன்றாக சிறுநீர் கழியும். மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மைகள் நீங்க தம்பதியர் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசவேண்டும். விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை. மனதையும், உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்தால் எதுவும் சாத்தியமே.