பெண்கள்தான் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகுவார்கள் என்றில்லை. சமீபகாலமாக இந்தியாவில் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆண்கள் தங்கள் மார்பகங்களில் ஏதேனும் கட்டிகள் அல்லது வீக்கம் இருப்பதாக உணர்ந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
அலட்சியம் செய்தால் புற்றுநோயின் வீரியம் அதிகமாகி உயிரிழப்புக்கும் வழிவகுத்துவிடும். ஆண்களில் சுமார் 81 சதவீதம் பேருக்கு மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் பற்றியோ, அதனை கண்டறிவதற்கு மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள் பற்றியோ தெரிந்திருக்கவில்லை என்று கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் முறையாக சிகிச்சை அளித்து நோய் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிட முடியும்.
குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்தாலோ, மரபணு ரீதியாகவோ, ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்தாலோ எளிதில் மார்பக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக பரம்பரை ரீதியாக யாருக்கேனும் புற்றுநோய் இருந்து வந்தால் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்பது மருத்துவர்களின் கருத்தாகும். அது நோய் உருவாகுவதற்கு முன்பே கண்டறிய உதவும். புற்றுநோயின் வீரியத்தை குறைக்கும். தகுந்த சிகிச்சை பெறுவதற்கும் உதவும் என்கிறார்கள்.