பிள்ளைகளின் வளர்ச்சி பெற்றோரை பெருமிதம் கொள்ளச் செய்கிறது. பார்த்துப் பார்த்துப் புளகாங்கிதம் அடைகிறார்கள். மகிழ்வெய்துகிறார்கள். அவர்களைப் பராமரிப்பதிலும், படிக்க வைப்பதிலும், அவர்களுக்கென்று உழைப்பதிலுமே பெற்றோர்கள் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியைக் கடந்துவிடுகின்றனர். பெற்றோரும் பிள்ளைகளும் இருவேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் வளர்ந்த சூழல் வேறு. பிள்ளைகள் வளர்கின்ற சூழல் வேறு.
அன்றைய பொருளாதார நிலை வேறு; இன்றைய பொருளாதார நிலை வேறு. மகன் என்பவன் தன்னுடைய தொடர்ச்சி. இதுதான் ஒவ்வொரு தந்தையின் எண்ணமும். ஆனால் மகனுக்கு இதில் உடன்பாடில்லை. அவன் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க முற்படுகிறான். மாறுபட்ட ஒரு தனித்தன்மையை அவன் விரும்புகிறான். அதற்காகவே போராடுகிறான். எனவே மோதல் உருவாகிறது. படிப்பு, வேலை, திருமணம் ஆகியவற்றில் பிள்ளைகளின் கருத்துகளைக் கேட்டறிவது மிக முக்கியம்.
அவர்களுக்குச் சுதந்திரம் அவசியம். ஆனால், அவர்களின் சிந்தனைகளும் தீர்மானங்களும் மிகச்சரியானவையாய் இருக்க வேண்டும். அவற்றை அறிந்து கொள்வது பெற்றோரின் பொறுப்பு. அவர்கள் எடுக்கின்ற தீர்மானம் அல்லது தேர்வு தவறானதாக இருந்தால், அதை அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி, சரியான வழிக்கு அவர்களைக் கொண்டு வருவதும் பெற்றோரின் கடமைதான். பிள்ளைகளின் பேச்சை ஒருபோதும் உதாசீனப்படுத்திவிடக் கூடாது.
எண்ணங்கள் மற்றும் ஆசைகளின் வெளிப்பாடுதான் வார்த்தைகள். அவற்றை அக்கறையுடன் கேட்க வேண்டும். அன்புடன் பேச வேண்டும். பேச்சுவாக்கிலேயே நல்ல விஷயங்களை அவர்கள் மனதில் விதைத்துவிட வேண்டும். கனிவான வார்த்தைகளுக்கு மட்டுமே உள்ளங்களை வசீகரிக்கின்ற ஆற்றல் உண்டு. முரட்டுத்தனமும் மூர்க்கக் குணமும் உள்ளங்களை வெல்வதே இல்லை. பெற்றோரையும் பிள்ளைகளையும் இடைவெளியின்றி இணைக்கின்ற பாலம் என்பதே புரிதலுடன்கூடிய அன்புதான். அதற்கு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். இன்றைய காலகட்டத்தில் பல குடும்பங்களில் பிள்ளைகளைப் பெரும்பிழையாய் பெற்றோரும், பெற்றோரைப் பெரும்பகையாய்ப் பிள்ளைகளும் பார்ப்பதற்கு என்ன காரணம்? சரியான புரிதல் இல்லை என்பதுதானே! மகனின் போக்கு தந்தைக்குப் புரியவில்லை.
தந்தையின் பேச்சு மகனுக்குப் பிடிக்கவில்லை. முரண்பாடுகளும் மோதல்களும் வலுத்துவிடுகின்றன. ஒருவருக்கொருவர் முகம் கொடுப்பதில்லை. எனவே பேசுகின்ற வாய்ப்பும் பறிபோய்விடுகின்றது. அது மிகமிக ஆபத்தான நிலை. இன்று எத்தனையோ குடும்பங்களில் பெற்றோர்கள் கண்ணீரை அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை என்பதே இல்லை. ஒரே வீட்டிற்குள் வெவ்வேறு திசைகளில் போய்க்கொண்டிருக்கிறார்கள். அதுதான் மிகப்பெரிய கொடுமை. பிள்ளைகளை ஆளாக்குவதில் பெற்றோரின் தியாகம் அளப்பரியது. தங்களை வருத்திக் கொள்கிறார்கள். வியர்வை சிந்துகிறார்கள்.
அந்த நீரருந்தி முளைத்தெழுந்து வளர்ந்தோங்குகின்ற தருக்கள் நல்ல கனிகளைக் கொடுத்தால், அதுதான் பெற்றோரின் வியர்வைக்குக் கிடைக்கின்ற வெகுமானம். இருந்தும் பெரும்பாலான பிள்ளைகள் ஏன் அதை உணர்வதில்லை. தாய், தந்தையின் தியாகங்களும் கண்ணீரும் அவர்களுக்குத் தெரியவில்லையா? அல்லது வாழ்க்கையின் அர்த்தமே விளங்க வில்லையா? என்னதான் கோளாறு. இரண்டு தலைமுறைகளுக்கு இடையிலான பார்வைக் கோளாறுதான். பிள்ளைகள் மீது பெற்றோர் வைத்திருக்கும் அதீத அன்பே பாதகமாகிவிடுவதும் உண்டு. இப்போதெல்லாம் இளைஞர்கள் மத்தியில் கஞ்சா, அபின், ஹெராயின், பான் மசாலா போன்ற போதைப் பழக்கங்கள் அதிகளவில் பரவிக் கொண்டிருக்கின்றன.
எனவே பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். தங்கள் பிள்ளைகள் கெட்டுப்போய்விடுவார்களோ என்ற கவலை அவர்களின் மனதை இறுக்கமாகப் பற்றிக் கொள்கிறது. எனவே தங்கள் பிள்ளைகளின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்கத் தொடங்குகிறார்கள். அது பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டுகிறது. தங்கள் உரிமைகளில் குறுக்கிடுவதுபோல் கருதுகிறார்கள். சிறுவயதில் இருந்தே பிள்ளைகளுக்கு நற்பண்புகளைப் பழம்போல் ஊட்ட வேண்டும். கொடூரச் சம்பவங்களையும், குடும்பச் சண்டைகளையும் அவர்களிடம் பேசக் கூடாது. மனதை பக்குவப்படுத்தக்கூடிய விஷயங்களைப் பேச வேண்டும்.
நீதிக் கதைகளை நிறைய சொல்ல வேண்டும். அப்படியெனில், அவர்கள் மனதில் தீய எண்ணங்கள் வேர்விடாது. நற்சீர் பொருந்தியவர்களாய் வளர்வார்கள். பிள்ளைகளிடத்தில் பெற்றோரும், பெற்றோரிடத்தில் பிள்ளைகளும் எதையும் சொல்லும் விதத்தில் சொன்னால் பலன் கிடைக்கும். யாராக இருந்தாலும் கோபமூட்டுவதைத் தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில், கோபம் தேவையற்ற வார்த்தைகளால் சிதறும். அந்த வார்த்தைகள் அக்கினி போல மனதைச் சுடும்.
அதனால், குடும்பத்திற்குள்ளேயே வெறுப்பும் பிரிவும் ஏற்படும். பெற்றோர் – பிள்ளைகள் உறவு அற்புதமானது; ஆனந்தமானது. வேலை, திருமண வாழ்க்கை என பிள்ளைகள் வெவ்வேறு இடங்களுக்குப் பிரிந்து செல்ல வேண்டிய காலம் வந்துவிடும். எனவே, கூடி இருக்கின்ற காலத்தைக் கொண்டாடி மகிழலாமே. உங்கள் பிள்ளைகளை ஒருபோதும் மற்றவர்கள்முன் மட்டம் தட்டிப் பேசாதீர்கள். அது அவர்களைத் தலைகுனியச் செய்வதுடன், அவர்களுக்குள் எஞ்சியிருக்கும் நம்பிக்கையையும் சாகடித்துவிடும். அவர்களின் திறமையைக் கண்டறிந்து பாராட்டுங்கள்.
அவர்கள் மேலும் மேலும் உயர்வார்கள். அவர்கள் நல்ல மனநிலையுடன் வாழ்வில் முன்னேறுவதற்கு, வீட்டில் இனிமையான சூழல் மிக அவசியம். எதிர்காலத்தைக் குறித்த நேர்மறையானச் சிந்தனைகளை அவர்களுக்குக் கொடுத்துக்கொண்டே இருங்கள். அவர்கள் சோர்வடையும் போது, தோள்கொடுத்து ஆதரவாய் தட்டிக் கொடுங்கள். பெற்றோரின் அன்பான தொடுதல், பிள்ளைகளுக்கு மிகப்பெரிய பலத்தையும் தைரியத்தையும் கொடுக்கும். வாழ்வின் மதிப்பை உணர்த்துங்கள்.
உயர்ந்த லட்சியங்களுடன் வளரத் துணைபுரியுங்கள். அப்படியெனில், தீயவர்களுக்கும் தீய பழக்க வழக்கங்களுக்கும் விலகியே இருப்பார்கள். இப்போது பிள்ளைகளின் கைச்செலவிற்கு ‘பாக்கெட் மணி’ என்னும் பேரில் தாராளமாகப் பணம் கொடுக்கின்றோம். பல இளைஞர்கள் பாதை மாறிப் போவதற்கு அதுவும் ஒரு காரணம். எனவே, பண விஷயத்தில் கட்டுப்பாடும் கண்டிப்பும் முக்கியம். உரிமைகளை வழங்கி, அவர்கள் சரியான பாதையில் பயணிக்க உதவ வேண்டும். அனைத்திற்கும் மேலாக, பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக பெற்றோர் விளங்க வேண்டும்.
பிள்ளைகள் வளர வளர, அவர்களின் பேச்சில் செயலில் மாற்றங்கள் ஏற்படும். அவற்றை கவனியுங்கள். அந்த மாற்றங்கள் நல்லவையாக இருந்தால், பாராட்டி ஊக்குவியுங்கள். தகாத மாற்றங்களாயின், தகுந்த முறையில் அன்புடன் அறிவுறுத்தி அவர்களை நல்வழிப்படுத்துங்கள். வெற்றிகளை ரசிப்பதுபோல், தோல்விகளையும் ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவத்தை ஏற்படுத்துங்கள்.
தோல்வி என்பது வெற்றிக்கான வழிதானே தவிர, அது வாழ்வின் முடிவல்ல என்பதை பிள்ளைகளின் மனதில் ஆணித்தரமாகப் பதியச் செய்யுங்கள். தோல்விகளை சவால்களாக ஏற்றுக் கொள்வார்கள். பிள்ளைகள்தான் வாழ்வின் அருட்பெருஞ்செல்வம் என்பதை எப்போதும் உங்கள் உள்ளத்தில் வையுங்கள். அன்பான குடும்பத்தைவிடவும் அழகான சொர்க்கம் வேறெங்கும் இல்லை.