மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.
இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு விருது பெறுவதற்காக ஹாங்காங் சென்றுள்ளனர். அதாவது, நாளை (மார்ச் 12 ) ஹாங்காங்கில் நடைபெறவுள்ள 16-வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், ‘பொன்னியின் செல்வன் -1’ சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டா தரணி), சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு (ஏகா லக்கானி) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க லைக்கா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் சார்பாக லைக்கா ஜி்.கே.எம்.தமிழ் குமரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குனர் மணிரத்னம் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஆகியோருடன் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் ரவி வர்மன் ஹாங்காங் பயணம் மேற்கொள்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.