நடிகர் ஜே.கே.ரித்தீஷ் தமிழில் சில படங்களில் நடித்து இருக்கிறார். அதன் பின் அரசியலில் நுழைந்த ஜே.கே.ரித்தீஷ் திமுக சார்பில் போட்டியிட்டு எம்பி ஆனார். அதன் பின் அதிமுகவில் சேர்ந்தார்.
அவர் கடந்த 2019ல் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அப்போது அவருக்கு 46 வயது மட்டுமே. இளம் வயதில் அவர் மரணம் அடைந்தது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மனைவிக்கு சிறை
இந்நிலையில் ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி நகைக்கடை நடத்தி வருகிறார். அவர் நகை பட்டறை வைத்திருக்கும் திருச்செல்வம் என்பவரிடம் நகை வாங்கியதற்கு 60 லட்சம் ரூபாய் பணம் தராமல் இருந்திருக்கிறார். அதற்காக கொடுத்த காசோலையும் பணம் இல்லாமல் திரும்பி வந்திருக்கிறது.
இது தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கில் தற்போது காரைக்குடி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. ஜே.கே.ரித்தீஷின் மனைவிக்கு 6 மாதம் சிறை மற்றும் 60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது நீதிமன்றம்.