ஹொரணை, மில்லினிய பிரதேசத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றின்போது தனக்கு அறிமுகமான யுவதியைச் சந்திக்கச் சென்ற இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டு அவரிடமிருந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரு யுவதிகள் உட்பட மூவர் மில்லினிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பெண்ணை சந்திக்க அழைப்பு
தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞர் ஹொரணையில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின்போது அங்கே கடையொன்றை நடத்தியதாக பொலிஸார்தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 17 வயது யுவதியுடன் பழகிய பாதிக்கப்பட்ட நபர், வேறோர் இளைஞரிடமும் நட்பாக பழகியுள்ளார். அந்த இளைஞர் பாதிக்கப்பட்ட நபரிடம், “அந்த பெண்ணை சந்திக்க விரும்பினால் நான் கூறும் இடத்துக்கு வா” என்று தொலைபேசியூடாக அழைத்துள்ளார்.
யுவதியை தேடிச்சென்ற இளைஞரை வீடு ஒன்றுக்குள் அழைத்துச் சென்று, கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளால் தாக்கி, அவரிடமிருந்த தங்க மாலை, கையடக்க தொலைபேசி, பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூவர் மில்லினிய பொலிஸாரால் கைது
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரும் மில்லினிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளையிட்ட அனைத்து பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹொரணை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, பிரதான சந்தேக நபர் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும், ஏனைய இரு சந்தேக நபர்களை தலா 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.